34.3 C
Dubai
July 14, 2020
UAE Tamil Web

தனது ஒரே மகனின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள அனுமதிக்குமாறு கோரிக்கை வைத்த அமீரக வாழ் இந்தியத் தந்தை..!

Satish-Chandra-Mishra-

துபாயில் உள்ள நிறுவனம் ஒன்றில் பாதுகாப்பு ஆய்வாளராக பணிபுரிந்துவருபவர் சதீஷ் சந்திர மிஸ்ரா (Satish Chandra Mishra). 45 வயதாகும் மிஸ்ரா உத்திரப் பிரதேசத்தில் உள்ள சோண்டா என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர். கடந்த ஜூன் 23 ஆம் தேதி மிஸ்ராவின் 17 வயது மகன் மரணமடையவே, உடனடியாக தாயகம் திரும்ப முடியாமல் தவித்திருக்கிறார். அப்போதுதான் மிஸ்ராவிற்கு இந்திய மற்றும் அமீரக அரசு அதிகாரிகளின் உதவி கிடைத்திருக்கிறது.

அதன் பயனாக, ஜூன் 30 ஆம் தேதி துபாய் – டெல்லி இடையே இயக்கப்படும் சிறப்பு விமானத்தில் தாயகம் திரும்ப இருக்கிறார் மிஸ்ரா.

“நான் வீட்டிற்குச் செல்ல இருக்கிறேன் என்பது மட்டுமே இந்த சூழ்நிலையில் எனக்கு ஆதரவு தரும் விஷயமாக இருக்கிறது. என் மகனின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ளவும் இந்த துயரமான நேரத்தில் என்னுடைய குடும்பத்தினரோடு இருக்கவும் நினைக்கிறேன்” என்றார் மிஸ்ரா.

தன் மகனுடைய இறப்புச் செய்தி கேள்விப்பட்ட உடனேயே, இந்தியாவின் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் இயக்கப்படும் சிறப்பு விமானங்களில் ஒன்றின் மூலமாக இந்தியாவிற்குப் பயணிக்க அனுமதிகோரி விண்ணப்பித்திருக்கிறார் மிஸ்ரா. ஆனால் அதுகுறித்து எந்த அழைப்பும் மிஸ்ராவிற்கு வரவில்லை.

அமீரகத்தில் சிக்கிக்கொண்ட இந்தியர்களில் பெரும்பாலானோர் மீண்டும் தாயகம் திரும்ப முயற்சித்து வருவதால் இந்த சிறப்பு விமானங்களில் டிக்கெட் கிடைப்பது கடினமானதாக இருக்கிறது.

உதவி கிடைத்தது எப்படி?

மிஸ்ராவின் கோரிக்கையை அவரது உறவினரான பல்ராம் திரிபாதி (Balram Tripathi) இந்திய விமானத்துறை அமைச்சருக்கு ட்விட்டர் மூலம் அனுப்பியிருக்கிறார். கூடவே, “இவர் (மிஸ்ரா) மிகப்பெரிய கஷ்டத்தில் இருக்கிறார். அவரது ஒரே மகன் ஜூன் 23 ஆம் தேதி இந்தியாவில் இறந்துவிட்டார். தனது மகனின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக துபாயில் காத்திருக்கிறார் மிஸ்ரா. துபாயில் உள்ள துணைத் தூதரகத்தில் இதற்காக அவர் விண்ணப்பித்திருக்கும் போதிலும், அவருக்கு இதுகுறித்த அழைப்புகள் ஏதும் இன்னும் வரவில்லை. தயவுசெய்து வேண்டிய உதவிகளை செய்துகொடுங்கள்” என விமானத் துறை அமைச்சருக்கு மிஸ்ராவின் சார்பாக கோரிக்கை வைத்திருக்கிறார் பல்ராம்.

பல்ராமின் ட்வீட்டிற்கு வெள்ளிக்கிழமை பதிலளித்த இந்தியாவின் விமானப் போக்குவரத்துறை அமைச்சர் திரு. ஹர்தீப் சிங் பூரி,” மிஸ்ராவிற்கு எனது இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவருடன் எங்களுடைய அலுவலகம் தொடர்பிலுள்ளது. மிஸ்ரா மீண்டும் தாயகம் திரும்ப வேண்டிய உதவிகளை செய்யுமாறு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், துபாயில் உள்ள இந்தியத் துணைத் தூதரகம் ஆகியவற்றிற்கு வலியுறுத்தியுள்ளோம். மிஸ்ராவின் மகனுடைய இளம் ஆன்மா சாந்தியடையட்டும்” என தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.

துபாயிலிருந்து கிளம்பும் சிறப்பு விமானத்தில் டெல்லிக்குப் பயணிக்க இருக்கும் மிஸ்ரா, அங்கிருந்து உத்திர பிரதேசத்தில் உள்ள கோரக்பூர் விமான நிலையத்திற்குப் பயணிக்க இருக்கிறார். தியோரியா மாவட்டத்தில் உள்ள மிர்ஸாவின் சொந்த கிராமமான சோண்டா விமான நிலையத்திலிருந்து 45 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

இதையும் படிங்க.!