39.8 C
Dubai
July 14, 2020
UAE Tamil Web

விபத்தில் பாதிக்கப்பட்ட இந்தியருக்கு 2 மில்லியன் திர்ஹம் இழப்பீடு வழங்க துபாய் நீதிமன்றம் உத்தரவு.!

போக்குவரத்து விபத்தில் பாதிக்கப்பட்ட இந்தியர் ஒருவருக்கு 2 மில்லியன் திர்ஹம் இழப்பீடு வழங்க காப்பீட்டு நிறுவனத்திற்கு துபாய் மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கேரளாவின் திரிசூர் செலக்கராவைச் சேர்ந்த 33 வயதான லத்தீப் உமர், ஜனவரி 14, 2019 அன்று ஜெபல் அலியில் ஒரு பெரிய கான்கிரீட் மிக்ஸரில்(big concrete mixer) சக ஊழியருடன் பயணம் செய்யும் போது (அவர் கான்கிரீட் மிக்ஸர் ஆபரேட்டர் அல்ல) விபத்துக்குள்ளனார்.

இதனை தொடர்ந்து லத்தீப் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் மார்ச் 20, 2019 வரை சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு ஏற்பட்ட முதுகெலும்புக் காயங்கள் காரணமாக, அவருக்கு பல அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன.

பின்னர், அவர் இந்தியாவில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு முதுகெலும்புக் காயங்களுக்காக மார்ச் 22 முதல் மே 30, 2019 வரை சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், முன்னதாக பாதிக்கப்பட்ட லத்தீபிற்கு 1 மில்லியன் திர்ஹம் இழப்பீடு வழங்கக்கோரி காப்பீட்டு நிறுவனத்திற்கு முதல் நிகழ்வு நீதிமன்றம் (சிவில்) உத்தரவிட்டது. இதனை மறுத்து லத்தீபின் வழக்கறிஞர்கள் குழு மேல்முறையீடு செய்தது. பின்னர் மேல்முறையீட்டு நீதிமன்றம் (The court of appeals) கீழ் நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்து, லத்தீபிற்கு 2 மில்லியன் திர்ஹம் இழப்பீடு வழங்குமாறு காப்பீட்டு நிறுவனத்திற்கு உத்தரவிட்டது.

இதனைப் பற்றி கேரளாவில் இருக்கும் பாதிக்கப்பட்ட லத்தீப், “மற்றவர்களின் உதவியின்றி என்னால் நகரவோ அல்லது நடக்கவோ முடியாத நிலையில் உள்ளேன். எனக்கு 3 மற்றும் 6 வயதுடைய இரண்டு குழந்தைகள் உள்ளனர், என் குடும்பம் என்னை மட்டுமே சார்ந்து உள்ளது. இந்த விபத்தினால் என் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், வாழ்நாள் முழுவதும் எனக்கு சிகிச்சைத் தேவைப்படுகிறது என்பதை நினைக்கும்போது மிகவும் வருத்தமாக உள்ளது. இந்த சமயத்தில் என் மனைவி எனக்கு பக்கபலமாக இருந்துவருகிறாள். எனக்கு இந்த புதிய வாழ்க்கையை வழங்கியதற்கும், எதிர்பாராத ஆபத்திலிருந்து வெளியேவர எனக்கு வாய்ப்பளித்ததற்கும் ஒவ்வொருநாளும் இறைவனுக்கு நன்றி கூறிக் கொண்டேயிருப்பேன்.” என்று மிகவும் உருக்கமாக பத்திரிகைகளுக்குத் தெரிவித்தார்.

சிவில் க்ளைம்ஸ்(civil claims) புகார்தாரர்களுக்காக வாதாடும் அப்துல்லா அல் நக்பி (Abdulla Al Naqbi) வக்கீல்கள் மற்றும் சட்ட ஆலோசகர்களின் வழக்கறிஞரான ஃபெமின் பானிகாசேரி (Femin Panikassery), “நாங்கள் முந்தைய தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்தோம். இந்த விபத்து தொழிலாளிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்று வாதாடியும், அவருக்கு அளிக்கப்பட்ட அனைத்து சிகிச்சைக்கான அறிக்கையையும் மருத்துவரிடமிருந்து பெற்று அதனையும் சமர்பித்தோம். நீதிமன்றத்தின் அறிவுறுத்தல்களின்படி மனுதாரரை பரிசோதிக்க ஒரு மருத்துவ நிபுணர் இந்தியாவுக்கு சென்றார்.” என்று வழக்கைப் பற்றி விளக்கினார்.

லத்தீப்பின் நிலையை ஆராய்வதற்காக கேரளா சென்ற மருத்துவ நிபுணரால் கொடுக்கப்பட்ட அறிக்கையும் இந்த இழப்பீட்டைப் பெறுவதற்கான முக்கிய காரணியாக இருந்தது என்று வழக்கறிஞர் கூறினார்.

“எனக்கு கிடைக்கும் இழப்பீடு பணம் எனது சிகிச்சைக்காகவே பயன்படும். எனது காயங்களிலிருந்து நான் இன்னும் முழுமையாக மீளவில்லை. இருந்தபோதிலும், எனக்குக் கிடைத்த இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி புது வாழ்கையை மகிழ்ச்சியுடன் வாழுவேன்” என்று லத்தீஃப் நம்பிக்கையுடன் கூறினார்.

Source: Khaleej Times

இதையும் படிங்க.!