fbpx
UAE Tamil Web

துபாய் டியூட்டி ஃப்ரீ: இரண்டே முயற்சிகள்; 10 லட்சம் டாலரைத் தட்டித் தூக்கிய இந்தியர்..!

rajashegar

இரண்டே முயற்சிகளில் துபாய் டியூட்டி ஃப்ரீயின் மில்லினியம் மில்லியனர் டிராவில் 10 லட்சம் அமெரிக்க டாலர்களை வென்று பலரையும் திரும்பிப் பார்க்கவைத்திருக்கிறார் ஹைதராபாத்தைச் சேர்ந்த கனிகாரம் ராஜசேகர் (45). இரண்டு குழந்தைகளுக்கு தந்தையான இவர் கடந்த மாதம் அமீரகத்திற்கு விசிட்டிங் விசாவில் வந்திருக்கிறார்.

கடந்த முறை போட்டியில் கலந்துகொண்டு வெற்றிபெற முடியவில்லை எனினும் இம்முறை பம்பர் பரிசை தனதாக்கியிருக்கிறார் ராஜசேகர். டிசம்பர் 18 ஆம் தேதி, 347 வரிசையில் 3546 எண் கொண்ட டிக்கெட்டினை அவர் வாங்கியிருக்கிறார்.

இதுகுறித்து அவர் பேசுகையில்,” இந்த பரிசுத் தொகையைக்கொண்டு எனது குழந்தைகளின் வளமான வாழ்விற்கு வேண்டிய முயற்சிகளை மேற்கொள்வேன். ஹைதராபாத்தில் ஒரு வில்லாவை உருவாக்குவேன். துபாயில் இமிகிரேஷன் சேவை நிறுவனம் ஒன்றை நிறுவவும் திட்டமிட்டுள்ளேன்” என்றார்.

மில்லினியம் மில்லியனர் டிராவைத் தொடர்ந்து நடத்தப்பட்ட ஃபைனஸ்ட் சர்ப்ரைஸ் டிராவில் இரண்டு கார்கள் மற்றும் மூன்று மோட்டார் பைக்குகளுக்கான அதிர்ஷ்டசாலி நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.

கார்கள்

இந்தியாவைச் சேர்ந்த துபாய் வாழ் மாணவரான சையத் ஷாபர் ஹசன் நக்வி, அட்டகாசமான BMW 750Li xDrive M Spor (Donington Grey) காரை வென்றார்.

ஹெரியாட் – வாட் பல்கலைக்கழகத்தில் சிவில் எஞ்சினியரிங் முதுகலை மாணவரான நக்வி,” இந்த வருடம் பரிசோடு ஆரம்பித்திருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது. பல தடைகளுக்குப் பிறகு எனக்குக் கிடைத்த இந்த பரிசு பல வெற்றிகளை எனக்கு அளிக்கும் என நம்புகிறேன்” என்றார்.

ஆறுமாத காலமாக நக்வி துபாய் டியூட்டி ஃப்ரீயில் பங்கேற்றுவருவது குறிப்பிடத்தக்கது. அவர் ஃபைனஸ்ட் சர்ப்ரைஸ் 1764 வது சீரிஸில் 0514 என்ற எண் கொண்ட டிக்கெட்டை வாங்கியிருக்கிறார்.

Range Rover Sport HST 3.0 400HP (Black) காரை துபாயில் வசித்துவரும் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த ஜெரார்டோ பெர்னாண்டோ என்பவர் ஓட்டிச்சென்றார். துபாய் டியூட்டி ஃப்ரீ நிர்வாகத்தால் பெர்னாண்டோவை தொடர்புகொள்ள முடியவில்லை என்றாலும் தனது நண்பர் மூலமாக தனது வெற்றிச் செய்தியை அவர் அறிந்திருக்கிறார். அவர் ஃபைனஸ்ட் சர்ப்ரைஸ் 1765 வது சீரிஸில் 0891 என்ற எண் கொண்ட டிக்கெட்டை வாங்கியிருக்கிறார்.

பைக்குகள்

துபாய் வாழ் இந்தியரான நிதின் அக்ராவத் (38) Harley-Davidson Softail Low Rider (Billiard Red) பைக்கை வென்றார். துபாய் உலக வர்த்தக மையத்தில் உள்ள நோவோடேல் -ல் கிரெடிட் மேனேஜராகப் பணிபுரியும் அக்ராவத் 13 ஆண்டுகளாக துபாயில் வசித்துவருகிறார். கடந்த டிசம்பர் 10 ஆம் தேதி அவர் ஃபைனஸ்ட் சர்ப்ரைஸ் 436 வது சீரிஸில் 0901 என்ற எண் கொண்ட டிக்கெட்டை வாங்கியிருக்கிறார்.

மார்த்தா ரோசாரி என்னும் துபாய் வாழ் இந்தோனேஷிய பெண் Indian Vintage Dark Horse (Thunder Black Smoke) பைக்கை பரிசாக வென்றார். 2002 ஆம் ஆண்டு ஃபைனஸ்ட் சர்ப்ரைஸ் டிரா துவங்கப்பட்டதில் இருந்து இதுவரையில் இந்தோனேஷியாவைச் சேர்ந்த எந்தப் பெண்ணும் மோட்டார்பைக்கை வென்றதில்லை என்பதை மார்த்தா தனது இந்த வெற்றியின் மூலம் மாற்றியமைத்திருக்கிறார்.

எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் மூத்த விமான நிலைய முகவராகப் பணிபுரிந்துவரும் மார்த்தா தனது 2 சக ஊழியர்களுடன் இணைந்து 437 வரிசையில் 3 டிக்கெட்டுகளை வாங்கியிருக்கிறார். தான் வெற்றிபெற்ற செய்தியைக் கேட்டு துள்ளிக்குதித்த மார்த்தா,” இதுதான் எனக்கான புத்தாண்டுப் பரிசு” என்றார்.

மற்றொரு துபாய் வாழ் இந்தியரான அகமது நாசர் கமல் ஷேக் Aprilia Tuono Factory (Atomico Racer) என்ற பைக்கை வென்றார். டிசம்பர் 20 ஆம் தேதி 438 சீரிஸில் 0597 என்ற எண் கொண்ட டிக்கெட்டை ஷேக் வாங்கியிருக்கிறார். அவர்குறித்து மேலதிக விபரங்கள் தெரியவில்லை.