துபாயின் துணை ஆட்சியாளரும் அமீரகத்தின் நிதியமைச்சருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் ஹம்தான் பின் ரஷீத் அல் மக்தூம் கடந்த புதன்கிழமையன்று காலமானார். இதனைத் தொடர்ந்து இந்தியப் பிரதமர் திரு.நரேந்திர மோடி, அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாயின் ஆட்சியாளரும் மறைந்த ஷேக் ஹம்தானின் சகோதரருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்களுக்கு இரங்கல் கடிதம் ஒன்றினை எழுதியுள்ளார்.
Prime Minister @narendramodi sent a message of condolences to his UAE counterpart @HHShkMohd on the passing away of his brother Sheikh Hamdan Bin Rashid Al Maktoum.#IndiaUAEDosti pic.twitter.com/eYzZnM52GW
— India in UAE (@IndembAbuDhabi) March 26, 2021
அபுதாபியில் உள்ள இந்தியத் தூதரகம் அந்தக் கடிதத்தினை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. மோடி எழுதிய கடிதத்தில்,
மாண்புமிகு ஷேக் முகமது அவர்களுக்கு, உங்களுடைய சகோதரர் மறைந்த தகவல் கேட்டு மிகுந்த வருத்தமடைந்தேன். இந்திய மக்கள் சார்பில் உங்களுக்கும், மக்தூம் குடும்பத்திற்கும் அமீரக மக்களுக்கும் என்னுடைய இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த இழப்பைத் தாங்கும் மன வலிமையை நீங்கள் பெற எல்லாம்வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்”
“ஷேக் ஹம்தானின் இழப்பினால் அஞ்சலி செய்துவரும் அமீரகத்தின் சகோதர சகோதரிகளின் உடன் இந்தியர்களும் இணைந்தே இருப்பார்கள். துபாயில் உள்ள இந்திய சமூக மக்கள், ஷேக் ஹம்தானின் கனிவையும் அவர்மீதான தங்களது அன்பையும் எப்போதும் உள்ளத்துள் வைத்திருப்பர். என்னுடைய இந்த இரங்கலை ஏற்றுகொள்ளுங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.