UAE Tamil Web

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை தத்ரூபமாக வரைந்து குடியரசு தின பரிசாக அவருக்கே அளித்த துபாய் வாழ் இந்திய சிறுவன்..!

modi portrait

துபாயில் வசித்துவரும் சரண் சிவக்குமார் (14) இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை 6 அடுக்குகள் கொண்ட ஸ்டென்சில் வகை ஓவியமாக தீட்டியிருக்கிறார். சல்யூட் அடித்தபடி, மத்திய தொழில் பாதுகாப்புப் பிரிவினருக்கான தொப்பியை அணிந்திருக்குமாறு பிரதமரை சிறுவன் வரைந்திருக்கிறார்.

- Advertisment -

அரசு முறைப் பயணமாக அமீரகம் வந்திருக்கும் இந்திய மாநிலங்களுக்கான வெளியுறவு மற்றும் பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் V.முரளிதரன் அவர்களிடம் சரண், பிரதமருக்கான தனது பரிசை அளித்தார்.

இதுகுறித்து ட்விட்டரில் அமைச்சர்,” துபாயில் வசித்துவரும் கேரளாவைச் சேர்ந்த இளம் கலைஞர் சரணை சந்தித்தேன். நரேந்திர மோடிக்கான குடியரசு தினப் பரிசாக சரண் அளித்த 6 அடுக்குகள் கொண்ட ஸ்டென்சில் ஓவியத்தைப் பெற்றுக்கொண்டேன். அபாரமான திறமைசாலி. அவருக்கு எனக்கு வாழ்த்துகள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

சரண் வரைந்த நரேந்திர மோடியின் ஓவியம்  90 செ.மீ உயரமும் 60 செ.மீ அகலமும் கொண்டதாகும். நியூ இந்தியன் மாடல் பள்ளியில் 9 ஆம் வகுப்பு பயின்றுவரும் சரண் கொரோனா வீடடங்கு காலத்தில் அமீரக தலைவர்கள் உட்பட 92 ஓவியங்களைப் படைத்துள்ளார்.

இதற்கு முன்னமே ஒருமுறை மோடியின் உருவத்தை 1.5 மீட்டர் உயரத்திலும் 1 மீட்டர் அகலத்திலும் சரண் வரைந்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார்.

ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் அமைப்பில் இருந்து கிராண்ட் மாஸ்டர் பட்டத்தையும் இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் அமைப்பில் ஸ்டென்சில் வகை ஓவியப் பிரிவில் சான்றிதழையும் சரண் பெற்றிருக்கிறார்.