UAE Tamil Web

துபாயில் தூள்கிளப்பிய இந்தியாவின் இளஞ்சிங்கங்கள் – 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியகோப்பை கிரிக்கெட்டில் அமீரகத்தை வீழ்த்திய இந்தியா..!

U19

19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றுவருகின்றன. இந்தத் தொடரின் முதல் ஆட்டத்தில் இந்தியா – ஐக்கிய அரபு அமீரக அணியை எதிர்கொண்டது. நேற்று துபாயில் நடந்த இப்போட்டியில் டாஸ்வென்ற அமீரகம் முதலில் பவுலிங்கைத் தேர்வு செய்வதாக அறிவித்தது.

துவக்கத்திலேயே அன்கிஷ் ரகுவன்ஷி 2 ரன்னில் அவுட்டானாலும் அடுத்துவந்த ஷேக் ரஷீத் – ஹனூர் சிங் காட்டிய அதிரடியில் இந்தியாவின் ஸ்கோர் எகிறியது.

என்ன போட்டாலும் அடி.. எப்படி போட்டாலும் அடி என்ற தார்மீக மந்திரத்தின் அடிப்படையில் ஆடிய ஹனூர் சிங் 120 ரன்களைக் குவித்தார். ரஷீத் (35), கேப்டன் யாஷ் துல் (68), ராஜவர்தன் ஹங்கர்கேகர் (48) என அடுத்தடுத்த வீரர்கள் அமீரக வீரர்களின் பந்துகளை பஞ்சராக்க 50 ஓவர் முடிவில் இந்தியா 5 விக்கெட் இழப்பிற்கு 280 ரன்களை எடுத்திருந்தது.

அமீரகத்தின் நசீர் அலி 2 விக்கெட்டுகளையும் விஜய ராகவன் 3 விக்கெட்டுகளையும் அஃப்ஸல் கான் ஒரு விக்கெட்டையும் எடுத்தனர்.

281 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களத்திற்கு வந்த அமீரக பேட்ஸ்மேன்களை ஆரம்பம் முதலே அலறவிட்டனர் இந்திய இளம் பவுலர்கள். அமீரக அணியின் துவக்க ஆட்டக்காரரான கை ஸ்மித் மட்டும் 45 ரன்கள் எடுத்தார்.

அதற்குப் பிறகு வந்த யாராலும் இந்திய அணி வீரர்களின் பந்துவீச்சுக்கு பதில்சொல்ல முடியாததால் வந்தே வேகத்திலேயே பெவிலியன் திரும்பிவிட்டனர்.

34.3 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 128 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது அமீரகம். இதன்மூலம் இந்தியா 154 ரன்கள் வித்தியாசத்தில் ஆசிய கோப்பையில் முதல் வெற்றியைப் பதிவு செய்தது.

இந்திய பவுலர்களில் ராஜவர்தன் ஹங்கர்கேகர் 3 விக்கெட்டுகளையும், கார்வ் சங்வான், விக்கி ஆஸ்வால், கவுஷல் தம்பே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

அதிரடியாக ஆடி சதமடித்த ஹனூர் சிங்கிற்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap