துபாய் விமான நிலையத்தில் நடைபெற்ற துபாய் டியூட்டி ஃபிரி மில்லினியம் மில்லினியர் ரேபில் டிராவில் இந்தியர் ஒருவர் ஒரு மில்லியன் டாலரை பரிசாக வென்றுள்ளார். இவர் கடந்த 14 வருடமாக இந்த ரேபில் ட்ராவில் பங்கெடுத்து வருகிறார். நீண்ட காத்திருப்பிற்கு பிறகு பரிசை தட்டிச் சென்றுள்ளார்.
வெற்றி பெற்ற 53 வயதான ராகுல் ஜுல்கா இந்தியாவில் உள்ள மும்பையை பூர்வீகமாக கொண்டவர் ஆவார். 2009 ஆம் ஆண்டிற்கு முன்னர் துபாயில் வசித்து வந்துள்ளார். தற்போது நைஜீரியாவில் வசித்து வருகிறார். இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இவ்வெற்றி குறித்து ராகுல் கூறியபோது, எப்படியும் ஒருநாள் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. இன்று தான் அந்த நாள் என்றார் மிகவும் மகிழ்ச்சி பொங்க.
இந்த வெற்றியின் மூலம் கிடைத்த பணத்தை கொண்டு எங்களின் பொருளாதார தேவைகளை பூர்த்தி செய்வதற்கும், குழந்தைகளின் எதிர்கால திட்டமிடலுக்கும், எனது ஓய்வு காலத்திற்கு பிறகும் இது மிகவும் பயனுள்ளதாக அமையும் என்று கூறினார்.
இந்த ரேபில் டிரா போட்டியானது முதன் முதலாக 1999 இலிருந்து நடத்தப்பட்டு வருகிறது. அப்போதிலிருந்து இப்பொழுது வரை வெற்றி பெற்ற இந்தியர்களில் இவர் 177 வது இந்தியர் ஆவார்.
இந்த டிக்கெட்டை இந்திய நாட்டை சேர்ந்தவர்கள் தான் அதிக அளவில் வாங்குகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஜப்பானில் உள்ள டோக்கியோவில் வசிக்கும் 40 வயதான கென் இக்கேடா என்பவர் ரேஞ்ச்ரோவர் ஸ்போர்ட்ஸ் காரை (Range Rover Sport HST 3.0 400HP) பரிசாக வென்றுள்ளார்.
அடுத்ததாக ஜப்பானை பூர்விகமாகக் கொண்ட அபுதாபியில் வசிக்கும் 53 வயதான ஹிப்ரி ஹனி பிஎம்டபிள்யூ எஸ் 100 ஆர் (BMW S 100 R) மோட்டார் பைக்கை பரிசாக பெற்றுள்ளார்.
துபாயில் வசிக்கும் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட 37 வயதான நவ்ஷாத் என்பவர் பிஎம்டபிள்யூ எப் 900 எக்ஸ் ஆர் (BMW F 900 XR) மோட்டார் பைக்கை வென்றுள்ளார்.