UAE Tamil Web

அபுதாபி பிக் டிக்கெட்டில் இந்தியருக்குக் கிடைத்த 12 மில்லியன் திர்ஹம்ஸ் பரிசுத்தொகை!

big ticket

புதன்கிழமை நடைபெற்ற பிக் டிக்கெட் அபுதாபி ரேஃபில் டிராவில் இந்தியர் ஒருவருக்கு 12 மில்லியன் திர்ஹம்ஸ் பரிசாகக் கிடைத்திருக்கிறது. அஜ்மானில் பேக்கரி ஒன்றில் விற்பனையாளராக பணிபுரிந்துவரும் இந்தியரான அசைன் முஷிப்புரத் (Assain Muzhippurath) தான் அந்த அதிர்ஷ்டசாலி.

- Advertisment -

இப்பொழுது அசைன் தனது சொந்த மாநிலமான கேரளாவில் தனது மனைவி ஷரீஃபா மற்றும் இரண்டு மகள்களான சனா ஃபாத்திமா, அலா ஃபாத்திமா ஆகியோருடன் மகிழ்ச்சியாக இருக்க முடியும். அவருடைய கடந்த சில மாத பிரார்த்தனைக்கு இப்பொழுது பலன் கிடைத்துவிட்டது.

இதுகுறித்து அவர் பேசுகையில்,” எனக்கு 47 வயதாகிறது. எனது வாழ்வின் 27 – 28 ஆண்டுகளை அமீரகத்திலேயே கழித்துவிட்டேன். என்னைப்போன்ற புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வீட்டிற்குத் திரும்புதல் என்பது மகிழ்ச்சியான கனவு போன்றது. கொரோனாவால் என்னுடைய வேலைக்கு எந்த ஆபத்தும் நிகழவில்லை. இருப்பினும் இத்தனை வருட காலத்தில் நான் பெரிதாக சேமித்து வைக்கவில்லை. ஆகவே எனது அதிர்ஷ்டத்தை சோதிக்க 4 – 5 முறை பிக் டிக்கெட் டிராவில் கலந்துகொண்டேன். என்னுடைய ஆசை நிறைவேறிவிட்டது. இந்த டிக்கெட்டை நான் தனியாக வாங்கினேன். அதனால் இப்பரிசுத்தொகையை நான் யாருடனும் பகிர்ந்துகொள்ள வேண்டிய அவசியம் இருக்காது” என்றார்.

தனது சொந்த ஊரான கோழிக்கோட்டில் புதிய தொழில் ஒன்றினை நிறுவவேண்டும் எனும் அவருடைய நீண்டநாள் ஆசை தற்போது நிறைவேற இருக்கிறது.

என்னுடன் இங்கே வசித்து வந்த எனது குடும்பம் தற்போது கேரளாவில் இருக்கிறது. என்னால் அவர்களை அங்கே வளமாக வாழ வைக்க முடியும்.

ஆனாலும், அசைன் எதிர்காலம் குறித்த தனது திட்டத்தை இன்னும் வகுக்கவில்லை.

“இந்த வெற்றி எதிர்பாராதது. ஆரம்பத்தில் இதனை பொய் என்றே நினைத்தேன். அதனாலேயே இதுகுறித்து என்னுடைய போனிற்கு அழைப்பு வந்தபோது மாஷா அல்லா, நன்றி எனச் சொல்லி இணைப்பைத் துண்டித்துவிட்டேன். அப்பொழுது நான் பணியில் இருந்தேன். என்னால் எனது எதிர்காலத்தை இப்பொழுது தீர்மானிக்க முடியும்” என்றார் அசைன்.

அசைன் 139411 என்னும் எண் கொண்ட டிக்கெட்டினை மே 14 , வியாழக்கிழமை அன்று வாங்கியிருந்தார்.

என்னுடைய வாழ்க்கையை மாற்ற இருக்கும் இந்த வெற்றியை எனக்கு அளித்த பிக் டிக்கெட்டிற்கு நன்றி என அசைன் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

இந்த வெற்றியை தனது நண்பர்களுடன் கொண்டாட இருக்கிறார் அசைன். நான் என்னுடைய நண்பர்களுக்கு விருந்தளிக்க இருக்கிறேன். “இது கொண்டாட்டத்திற்கான நேரம்” என்றார் அசைன்.

பிக் டிக்கெட் வரலாற்றிலேயே முதன்முறையாக ஜாக்பாட் பரிசு தவிர்த்து மேலும் 15 பரிசுகள் தற்போது அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த மகத்தான டிரா ஜூலை 3 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.