இந்தியாவின் மங்களூருவைச் சேர்ந்த 54 வயதான பெண்மணி (பெயரை குறிப்பிட அவர் விரும்பவில்லை) கடந்த பிப்ரவரி மாதம் 10 ஆம் தேதி ராஸ் அல் கைமாவிற்கு வந்திருக்கிறார். அவரது கணவர் நோயுற்று இருப்பதால் வீட்டு சூழ்நிலையை சமாளிக்கும் பொறுப்பு அவருக்கு இருந்ததே அவருடைய இந்த முடிவிற்குக் காரணம்.
அமீரகம் வந்த சில நாட்களிலேயே அவருக்கு கொரோனா பாசிட்டிவ் ஆகியிருக்கிறது. பிப்ரவரி 18 ஆம் தேதி, வெளிவந்த அவருடைய கொரோனா பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா பாசிட்டிவ் என்பது தெரியவரவே, மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.
நிமோனியா, மாரடைப்பு என அடுத்தடுத்து அவருடைய உடல் மோசமாகத் துவங்கியது. இடையில் 2 முறை அவருக்கு வென்டிலேட்டர் உதவியும் அவருடைய மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
உயிருக்குப் போராடிய பெண்மணி சகஜ நிலைக்கு வர 7 மாதங்கள் பிடித்திருக்கின்றன. ராஸ் அல் கைமா மருத்துவமனை மற்றும் ராஸ் அல் கைமா கள மருத்துவமனையில் இவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதற்காக கட்டணம் எதுவும் வேண்டாம் என இம்மருத்துவமனைகள் தெரிவித்துள்ளன.
இவருடைய நிலைமையை அறிந்த அமீரக வாழ் இந்தியரும் சமூக ஆர்வலருமான நசீர் வட்டனப்பள்ளி இவருக்கு உதவ முன்வந்துள்ளார். இந்திய துணைத் தூதரகத்திற்கு இப்பெண்மணியைக் குறித்து நசீர் தகவல் தெரிவித்திருக்கிறார்.
அதன்பயனாக செவிலியர் ஒருவர் துணையுடன் பெண்மணியை இந்தியாவிற்கு அழைத்துச்செல்ல அனைத்து உதவிகளையும் இந்தியத் தூதரகமே மேற்கொண்டது. இதற்கான செலவுகளையும் துணைத் தூதரகமே ஏற்றது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்துப் பேசிய நசீர்,” கணவருக்கு உடல்நிலை சரியில்லாததால் அமீரகம் வந்த பெண்மணி இந்த நிலையில் நாடு திரும்புவது வருத்தமளிக்கிறது. சமீபத்தில் அவருடைய ஒரே பையன் ஒருவரும் இறந்தது அவருக்கு மனதளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பெண்மணியை இந்தியாவிற்கு அனுப்ப பெரும் உதவி செய்த துணைத் தூதரகத்திற்கு நன்றி” என்றார்.
