UAE Tamil Web

அபுதாபியில் கட்டப்பட்டுவரும் பிரம்மாண்ட இந்து கோவிலைப் பற்றிய சுவாரஸ்யத் தகவல்கள் – 500 டன் கல்லில் செதுக்கப்பட்டுள்ள சிற்பங்களின் கண்கவர் புகைப்படங்கள்..!

BAPS Hindu Mandir temple

உலகின் அனைத்து நாடுகளில் இருந்தும் நம்பிக்கை என்ற ஒன்றை மட்டும் வைத்துக்கொண்டு அமீரகத்தில் வந்திறங்கும் மக்கள் ஏராளம். சமத்துவம், பாதுகாப்பு மற்றும் மத நல்லிணக்கம் என ஒரு சராசரி மனிதனின் பாதுகாப்பிற்கான அத்தனை தேவைகளுக்கும் உறைவிடமாக அமீரகம் உருவெடுத்துள்ளது. உலகளவில் அமீரகத்தை அடையாளப்படுத்துவது அதன் பன்முகத்தன்மையே.

அமீரகத்தின் இந்த பொற்கிரீடத்தில் மேலும் ஒரு வைரக்கல் பதித்தாற்போல் துவங்கப்பட்டது தான் அபுதாபி இந்துக்கோவில். சொந்த ஊர், கண்ணிற்குள் நிழலாடும் குடும்பத்தினரின் முகங்கள் என அமீரகத்தில் கஷ்டப்படும் ஒவ்வொரு இந்தியருக்கும் ஒரு நிமிடம் தங்களது சொந்த நாட்டில் இருப்பது போல மகிழ்ச்சியை அளிக்கும் விதத்தில் இக்கோவில் கட்டப்பட்டு வருகிறது.

நிலம் வழங்கிய அமீரகம்

கடந்த 2015 ஆம் ஆண்டு இந்தியப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அரசுமுறை பயணமாக அமீரகத்திற்கு முதல் முறையாக வருகை புரிந்தார். அப்போது அமீரகத்தில் வசித்துவரும் இந்து மக்களின் நலனைக் கருத்தில்கொண்டு கோவில் கட்ட அனுமதி வழங்குமாறு இந்தியப் பிரதமர் கோரிக்கை ஒன்றினை முன்வைத்தார்.

இதனை ஏற்றுக்கொண்ட அமீரகமும், அபுதாபியின் அல் ரக்பா பகுதியில் 27 ஏக்கர் நிலத்தை கோவில் கட்ட தானமாக அளித்தது. இதற்கான உத்தரவை அபுதாபியின் பட்டத்து இளவரசரும் அமீரக ஆயுதப் படையின் தலைமைத் துணைத் தளபதியுமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் வெளியிட்டார்.

நிர்வாகம்

இந்த கோவிலின் கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதற்கும், நிர்வாகம் செய்வதற்கும் குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் நகரைச் சேர்ந்த பிஏபிஎஸ் (போச்சசன்வாசி ஸ்ரீ அக்ஷார் புருஷோத்தம் சுவாமிநாராயண் சன்ஸ்தா) அமைப்பிற்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்தியா உள்பட இங்கிலாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் மொத்தம் 1,200 கோவில்களை கட்டி பிஏபிஎஸ் அமைப்பு நிர்வகித்து வருகிறது.

அடிக்கல் நாட்டுவிழா

இந்து மரபின் அடிப்படையில் கட்டப்பட்டுவரும் இந்த கோவிலின் அடிக்கல் நாட்டுவிழா 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 11 ஆம் தேதி நடைபெற்றது. திரு.நரேந்திர மோடி அவர்கள் காணொளிக் காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டி புதிய வரலாற்றுக்கு முன்னுரை எழுதினார். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில் அமீரகத்திற்கான இந்தியத் தூதர் திரு. பவன் குமார் கலந்துகொண்டார்.

சிற்பம், கட்டிடக்கலை

சுமார் 55,000 சதுர அடியில் உருவாகும் இந்த கோவிலின் அடித்தளம் அமைக்கும் பணியில் இரும்பு, உருக்கு போன்ற உலோகங்கள் இல்லாமல் பாரம்பரிய முறைப்படி நிலக்கரி சாம்பலும் பாறைகளும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இந்தக் கோவிலில் இடம்பெற, இந்தியாவில் 500 டன் எடைகொண்ட கற்களில் சிற்பங்களை உருவாக்கி வருகிறார்கள் 3000 கலைஞர்கள். இந்த சிலைகளில் இதிகாசங்களான மகாபாரதம் மற்றும் இராமாயண காட்சிகள் இடம்பெற்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்த சிற்பப் பணிகள் நிறைவடைந்திருக்கின்றன. அவற்றின் புகைப்படங்களை கீழே காணலாம்.

Abudhabi Hindu Temple
Image Credit: BAPS Hindu Mandir

இந்தியாவின் ராஜஸ்தானில் உள்ள அரண்மனைகளில் பயன்படுத்தப்பட்டிருக்கும் வகையிலான கற்கள் இந்தக் கோவிலில் இடம்பெறுகின்றன. அமீரகத்தின் அதீத வெப்பத்தை தாங்கும் வல்லமை கொண்டவை இந்தக் கற்கள்.

BAPS Hindu Mandir temple
Image Credit: BAPS Hindu Mandir
BAPS Hindu Mandir temple
Image Credit: BAPS Hindu Mandir
BAPS Hindu Mandir temple
Image Credit: BAPS Hindu Mandir
BAPS Hindu Mandir temple
Image Credit: BAPS Hindu Mandir
BAPS Hindu Mandir temple
Image Credit: BAPS Hindu Mandir
BAPS Hindu Mandir temple
Image Credit: BAPS Hindu Mandir

இந்த கோவிலில் 5 ஆயிரம் டன் எடையுள்ள இத்தாலி கராரா மார்பிள் சலவை கற்கள் பயன்படுத்தப்படுகின்றன. அதேபோல கட்டிட வெளிப்புற தோற்றத்திற்காக 12 ஆயிரத்து 250 டன் எடையுள்ள இளஞ்சிவப்பு கற்கள் பயன்படுத்தப்பட உள்ளது. இந்த இளஞ்சிவப்பு மணற்கற்கள் ராஜஸ்தானில் இருந்து கொண்டுவரப்பட இருக்கின்றன.

தற்போது இந்தியாவில் இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கும் இந்த சிற்பங்கள் 2021 ஆம் ஆண்டின் முதலாம் காலாண்டிற்குள் அமீரகம் வந்தடையும். இந்த சரக்குப் போக்குவரத்தை துபாய் டிபி வேர்ல்ட் மற்றும் டிரான்ஸ்வேர்ல்ட் குழுமம் மேற்கொள்ள இருக்கிறது.

வழிபாடு

இந்தக் கோவிலில் சிவன், கிருஷ்ணன் மற்றும் ஐயப்பன் சன்னதிகள் இடம்பெறுகின்றன. இவைமட்டுமல்லாமல் பிரார்த்தனை கூடங்கள், கண்காட்சி அரங்குகள், கற்றல் பகுதி, இளைஞர்கள் மற்றும் சிறுவர்களுக்கான விளையாட்டு திடல்கள், பூங்காக்கள், உணவு அருந்தும் கூடங்கள், புத்தகங்கள் மற்றும் அன்பளிப்பு விற்பனை கடைகள் ஆகியவையும் இடம்பெற இருக்கின்றன.

இங்கே திருமணங்களுக்கான பகுதியும் கட்டப்படுகிறது. இந்து முறைப்படி இங்கே திருமண வைபவங்கள் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகிழ்ச்சிக்கான நேரம்

தீபாவளி, பொங்கல் போன்ற இந்துப் பண்டிகைகளின் போது, அமீரகத்தில் வசிக்கும் இந்தியர்கள் ஒன்றுகூடவும், தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதற்குமான இடமாக இது இருக்கும் என்பதே பெரும்பான்மையான அமீரக வாழ் இந்தியர்களின் கருத்தாக இருக்கிறது.