UAE Tamil Web

அமீரகத்தின் முதல் ஹோட்டல் கட்டப்படுவதற்கு காரணமாக அமைந்த இந்தியா – சுவாரஸ்ய வரலாறு..!

UAE-s-first-ever-hotel-tells-how-it-all-started-90-years-ago_

இன்றைய தேதியில் உலகின் அதிக 5 ஸ்டார் ஹோட்டல்களைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் அமீரகம் முன்னிலை வகிக்கிறது. 2021 ஆம் ஆண்டின் இறுதியில் அமீரகத்தில் இருக்கும் ஹோட்டல் அறைகளின் எண்ணிக்கை 108,300 ஆக இருக்கும் என பிரபல முதலீட்டு மேலாண்மை நிறுவனம் கொலைடர்ஸ் நிறுவனம் கணித்துள்ளது. பொருளாதார முன்னேற்றமும், சுற்றுலாத்துறையில் தன்னிகரற்று விளங்கும் அமீரகத்தின் நிலைக்கு இது சாதாரணம் தான்.

ஆனால் அமீரகத்தின் முதல் ஹோட்டல் கட்டப்பட்டது அப்படியில்லை. சொல்லப்போனால் இந்த ஹோட்டலை கட்டியதன் பின்னணியில் இந்தியாவும் ஒரு காரணம் என்றால் நம்ப முடிகிறதா? ஆம். உலகத்தில் நாடு என ஒன்று இருந்தால் ஆட்களை சேர்த்துக்கொண்டு வியாபாரம் செய்கிறோம் என்ற பெயரில் நாடு பிடிக்க பிரிட்டன் வெறிப்பிடித்து திரிந்த காலம் அது. ஐரோப்பாவில் இருந்து பல்வேறு நாடுகளுக்கும் பயண வழித்தடங்கள் ஜரூராக அமைக்கப்பட்டுக்கொண்டிருந்தன.

விமானங்கள் புழக்கத்திற்கு வந்திருந்ததால் கப்பல் பயணம் என்ற தலைவலி தேவையில்லை. காற்று, கடல் கொந்தளிப்பு என திசைமாறி திக்கற்ற தேசங்களுக்கு பயணித்தது எல்லாம் போதும். விமானமே பெட்டர் என்ற முடிவில் பிரிட்டன் இருந்தது. அப்படி பிரிட்டனில் இருந்து வளைகுடா நாடுகள் வழியாக இந்தியாவிற்கு செல்ல பாதை அமைக்கப்பட்டது. அதென்ன விமானப் பாதை? விமானப் பயணத்திற்கு என்ன தார் ரோடா போடப் போகிறார்கள்? என்கிறீர்களா?

இப்போதுள்ள விமான தொழில்நுட்பங்கள் அப்போது கிடையாது. ஆகவே நம்மூர் பஸ் போல பயணத்தின் இடையே ஒரு ஓய்விடத்தில் விமானத்தை நிறுத்திவிடுவார்கள். அதிகபட்சம் 1 நாள். “சாப்புடுற ஆள் எல்லாம் போய் சாப்டு வா” என காலி வாட்டர் கேனைத் தட்டும் பிரகஸ்பதிகள் அப்போது இருந்தார்களா தெரியாது. ஆனால் விமானிகள் மற்றும் விமான பணியாளர்களுக்கு ரெஸ்ட் கொடுக்கவேண்டும் என இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முக்கியமாக விமானத்திற்கு எரிபொருள் நிரப்ப வேண்டுமே?

1939 ஆம் ஆண்டு பிரிட்டனின் இம்பீரியல் ஏர்வேஸ்-ஆக இருந்த விமான நிறுவனம் பின்னர் பிரிட்டிஷ் ஓவர்சீஸ் ஏர்வேஸ் கார்ப்பரேஷனுடன் (BOAC) இணைந்தது. ஐரோப்பாவின் முக்கிய விமானப் போக்குவரத்து நிறுவனம் இதுதான் அந்தக்காலகட்டத்தில்.

பிரிட்டனில் இருந்து இந்தியா கிளம்பினால் இடையில் ஒரு ஸ்டாப் வைக்கவேண்டும். வைத்துவிட்டார்கள் ஷார்ஜாவில். இப்படி ஷார்ஜாவில் தரையிறங்கும் விமானங்களின் பணியாளர்கள் மற்றும் விமானிகள் ஓய்வெடுக்க கட்டப்பட்டது தான் BOAC ஓய்வு விடுதி. அதாவது 1932 – 33 ஆம் ஆண்டுகளில். இதுவே அமீரகத்தின் முதல் ஹோட்டலாகும். 6 தனி அறைகளும், 3 இரட்டை அறைகளும் இங்கே கட்டப்பட்டுள்ளது. பின்னர் 1935 ஆம் ஆண்டு இந்தியாவைச் சேர்ந்த வானிலை  ஆய்வாளர்களுக்காக கூடுதலாக 5 அறைகள் கட்டப்பட்டன.

The-cistern-in-the-courtyard--with-firewood-as-fuel-for-heating-water.--photo--Dunn--1933-
Image Credit: WAM

இந்த ஹோட்டல் கட்டும் பணி கிட்டத்தட்ட 9 மாதகாலம் நீடித்திருக்கிறது. இந்தக் காலத்தில் விமானிகள் டெண்ட் அடித்து தங்கினார்களாம் என்பது கூடுதல் தகவல்.

அப்போதைய ஷார்ஜா

அமீரகம் எல்லாம் 1971 ஆம் ஆண்டிற்குப் பிறகுதான். அதற்கு முன்னர் வரையில் தனித்தனி எமிரேட்கள் ; தனித்தனி தலைவர்கள் தான். ஆனால் அனைத்து எமிரேட்களிலும் பிரிட்டிஷாரின் செல்வாக்கு அதிகமிருந்தது. அது அவர்களின் வழக்கம். நாடுகளை வளைத்துப்போடுவதில் உலகமகா கெட்டிக்காரர்கள். இப்போது விஷயம் அதுவல்ல என்பதால் மீண்டும் ஹோட்டலுக்கு வருவோம்.

எல்லாம் நன்றாகத்தான் சென்று கொண்டிருந்தது. திடீரென ஒருநாள் ஷார்ஜாவில் இனி விமானங்களை நிறுத்தப்போவதில்லை என BOAC அறிவித்தது. ஷார்ஜா வழியாக ஜனவரி 10 ஆம் தேதி 1947 ஆம் ஆண்டு BOAC இன் கடைசி விமானம் இயக்கப்பட்டது. இருப்பினும் மூட்டை முடிச்சுகளைக் கட்டிக்கொண்டு BOAC ஷார்ஜாவில் இருந்து வெளியேற சில மாதங்கள் பிடித்தன.

அதன்பிறகு ஷார்ஜா விமான மையம் இண்டர்நேஷனல் எரேடியோ லிமிடட் (International Aeradio Limited) என்னும் நிறுவனத்தின் கைகளுக்குச் சென்றது. அப்போதும் இந்த ஹோட்டல் பயன்பாட்டில்தான் இருந்தது.

1950 – 60 களில் ஷார்ஜா, துபாய்க்கு வருவோர் தங்குவதற்கு இந்த ஹோட்டலைத்தான் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். அதுமட்டுமல்லாது இரண்டாம் உலகப்போர் முடிவடைந்த பிறகு அமீரகத்தை பிரிட்டன் உற்றுநோக்கத் துவங்கியது. அதன்காரணமாக பஹ்ரைனில் பணியமர்த்தப்பட்ட பிரிட்டிஷ் அதிகாரிகள் அவ்வப்போது அமீரகம் வருவது வழக்கம்.

அப்போதெல்லாம் இந்த ஹோட்டலைத் தான் அவர்கள் பயன்படுத்தியிருக்கிறார்கள். காரணம் எளிது, ஷார்ஜா, துபாய் ஆகிய நகரங்களுக்கு அருகே மேற்கத்திய பாணியில் கட்டப்பட்ட ஒரே ஹோட்டல் இதுமட்டும்தான்.

சொல்லப்போனால் மத்திய கிழக்கின் பிரிட்டிஷ் வங்கி (British Bank of the Middle East) மற்றும் அல் மக்தூம் மருத்துவமனை கட்டப்படுவதற்கு இந்த ஹோட்டல் மறைமுகமாக உதவியாக இருந்தது. ஆமாம். மத்திய கிழக்கின் பிரிட்டிஷ் வங்கியை நிறுவிய மார்க் ஸ்டோட் மற்றும் அல் மக்தூம் மருத்துவமனையை கட்டிய டெஸ்மன் மெக்காலே ஆகியோர் கட்டுமானப் பணிகள் நடைபெறும்போது இங்கேதான் தங்கியிருந்திருக்கிறார்கள்.

ஒரே ஏசி ஹோட்டல்

அமீரகத்திலேயே முதன்முதலில் ஏசி அறைகளைக்கொண்ட ஹோட்டல் என்ற பெருமையையும் இது கொண்டிருக்கிறது. எகிப்தைச் சேர்ந்த சலீம் ஸபால் 1960 ஆம் ஆண்டு எழுதிய கட்டுரையில்,” நல்ல உணவு, இரவு உறக்கத்திற்கு குளிர்சாதன வசதியுள்ள அறைகளைக்கொண்ட ஒரே ஹோட்டல் இதுமட்டும்தான்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

1961 ஆம் ஆண்டு துபாயில் கட்டப்பட்ட ஏர்லைன்ஸ் ஹோட்டல் இதுபோன்றே பெரிது என்றாலும் அங்கே ஏசி வைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சொர்க்கபுரி

புகழ்பெற்ற நாவலாசிரியரான ஹாமன்ட் இன்னஸ் (Hammond Innes) 1954 ஆம் ஆண்டு இந்த ஹோட்டலுக்கு விஜயம் செய்திருக்கிறார். அதுபற்றி அவர் பின்னர் குறிப்பிடுகையில்,” இது வெறும் விமான டிரான்ஸிட் ஹோட்டல் மட்டுமல்ல. பாலைநிலத்தில் இதுபோன்ற அருமையான ஹோட்டல்கள் அமைவது அரிது. எதிர்காலத்தில் ஷார்ஜா வசதி படைத்தவர்களின் குளிர்கால சுற்றுலாத்தலமாக ஒரு சொர்க்கபுரியாக திகழும் என கணிக்கிறேன்” என்கிறார்.

இன்னஸ் குறிப்பிட்டது போலவே, ஷார்ஜா இன்று மிகப்பெரிய வளர்ச்சியைத் தாங்கி நிற்கிறது. ஏன் மொத்த அமீரகமும் தான். எப்படியோ துவங்கிய ஷார்ஜாவின் ஹோட்டல் வளர்ச்சி இன்று யாராலும் நெருங்கமுடியாத அளவிற்கு வளர்ந்துள்ளது.

பிரிட்டன் – இந்தியா இடையேயான பயணத்திற்கு ஓய்விடமாக இந்த ஹோட்டல் கட்டப்பட்டது. ஆகவே, இந்தியர்களுக்கும் இந்த ஹோட்டலுக்கும் ஒரு மறைமுக தொடர்பு இருந்திருப்பது உறுதியாகிறது.

UAE-s-first-ever-hotel-tells-how-it-all-started-90-years-ago_
110 Shares
Share via
Copy link