அமீரகத்தின் தலைநகரில் மிகப்பெரிய அளவில் சர்வதேச யோகா தினத்தை கொண்டாட ஆயிரக்கணக்கான சமூக உறுப்பினர்கள் ஷேக் சயீத் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் குவிந்தனர். அமீரகத்தில் இந்த அளவிற்கு விமர்சையாக நடத்தப்படும் முதல் யோகா தினம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று ஜூன் 21, உலக அளவில் யோகா தினம் கொண்டாடப்பட்டது, இந்நிலையில் இந்த ஆண்டு ‘yoga for humanity’ என்ற தலைப்பில் யோகா தினம் அனுசரிக்கப்பட்டது. 1,000க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள், (பெரும்பாலோர் அபுதாபி இந்தியப் பள்ளியிலிருந்து வந்தவர்கள்), பலதரப்பட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள், மற்றும் அனைத்து வயதினரும் இதில் கலந்துகொண்டனர்.
அமைதி மற்றும் நல்லிணக்கத்தின் உறுதியை உலகெங்கிலும் பரப்பும் வகையில் பல்வேறு யோகாசனங்களை ஒற்றுமையாகச் செய்தனர். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற Tolerance & Coexistence துரையின் அமைச்சரான ஷேக் நஹ்யான் பின் முபாரக் அல் நஹ்யான், யோகா ஆர்வலர்கள் நிரம்பிய மைதானத்தைக் கண்டு மகிழ்ச்சியடைந்தார்.
மேலும் இதுபோன்ற நிகழ்வுகளால் நேர்மறை ஆற்றலால் ஈர்க்கப்பட்டதாகக் அவர் குறிப்பிட்டார். அமீரகத்திற்கான இந்தியத் தூதர் சுஞ்சய் சுதிர், சூரியனின் இயக்கத்துடன் உலகம் முழுவதும் பல்வேறு நிகழ்வுகளைக் கண்ட உலகளாவிய ‘கார்டியன் ரிங்’ நிகழ்ச்சியில், அமீரகம் தீவிரமாகப் பங்கேற்றதால், உலகின் கண்கள் தற்போது அமீரகம் மீது உள்ளது என்று கூறினார்.
அபுதாபியில் நடந்த காலை நிகழ்வின் போது, ஷேக் நஹ்யான், பாரம்பரிய இந்திய முறையில் ‘நமஸ்தே’ என்ற இதயப்பூர்வமான கூறி தனது உரையை துவங்கினார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவையும் புரிந்துணர்வையும் கொண்டாடுவதற்கும் ஆழப்படுத்துவதற்கும் இந்த நிகழ்வு ஒரு தளமாக அமைந்தது என்று ஷேக் நஹ்யான் மற்றும் தூதர் இருவரும் தெரிவித்தனர்.
“எங்களுக்கு யோகா மற்றும் சர்வதேச யோகா தினத்தை வழங்கியதற்காக இந்தியா என்ற பெரிய தேசத்திற்கு நன்றி. இதனால் இந்தியாவிற்கும் அமீரகத்திற்கும் இடையே ஏற்கனவே உள்ள சிறந்த உறவை நாம் தொடர்ந்து மேம்படுத்த முடியும் என்பது எனது நம்பிக்கை” என்றும் அமைச்சர் மேலும் கூறினார்.