UAE Tamil Web

நீடிக்கும் இஸ்ரேல் – பாலஸ்தீன் பதற்றம் : இஸ்ரேல் செல்லும் விமானங்களை ரத்து செய்த அமீரக விமான நிறுவனங்கள்..!

2020_dubai_international_airport

இஸ்ரேல் – பாலஸ்தீன் இடையேயான போர் தொடர்ந்து நடைபெறுவதால், அமீரகம் – இஸ்ரேல் இடையேயான பயணிகள் மற்றும் சரக்கு விமானங்களை ரத்து செய்வதாக அமீரக விமான நிறுவனங்கள் அறிவித்துள்ளன. முன்னதாக ஐரோப்பிய மற்றும் அமெரிக்க விமான நிறுவனங்களும் இஸ்ரேல் செல்லும் விமானங்களை ரத்து செய்வதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

அபுதாபியை மையமாகக்கொண்டு இயங்கிவரும் எதிஹாட் விமான நிறுவனம் அமீரகம் – டெல் அவிவ் இடையே ஞாயிற்றுக்கிழமை முதல் பயணிகள் மற்றும் சரக்குப் விமானப் போக்குவரத்தை ரத்து செய்வதாக தனது இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளது.

மேலும், அதன் இணையதளத்தில்,”எதிஹாட் தொடர்ந்து நிலையை கண்கானித்துவருகிறது. அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு நிறுவனங்களுடன் இதுகுறித்து தொடர்ந்து இணைப்பில் இருக்கிறோம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேபோல ஃபிளை துபாய் நிறுவனமும் அமீரகம் – இஸ்ரேல் இடையேயான விமானப்போக்குவரத்தை ஞாயிற்றுக்கிழமை முதல் ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. இருப்பினும் இன்று இரண்டு விமானங்களை இஸ்ரேலுக்கு இந்நிறுவனம் இயக்கியது குறிப்பிடத்தக்கது.

இந்நிறுவனத்தால் தினசரி திட்டமிட்ட நான்கு விமானங்களைவிடக் குறைவான விமானங்களே சமீபத்தில் இஸ்ரேலுக்கு இயக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.