சொந்த நாட்டில் பெரிய வாழ்வாதாரம் இருந்தாலும் வாழ்நாள் முழுவதும் இந்தியாவில் உழைத்து சம்பாதிக்கும் தொகையை குறுகிய காலத்தில் வெளிநாட்டில் சம்பாதித்து விடலாம் என்ற நம்பிக்கையில் தாய் மண்ணை விட்டு கடல் கடந்து செல்வோருக்கு, இந்த பதிவு.
படித்தவர்கள் முதல் படிக்காதவர் வரை பெரும்பாலானோர் வெளிநாட்டில் சம்பாரிக்கவே விரும்புகிறார்கள். ஆனால் வெளிநாட்டவர்கள் இந்தியாவில் உள்ள முக்கியமான சுற்றுலா நினைவிடங்களைச் சுற்றிப் பார்க்கவும், இந்திய வளங்களை பயன்படுத்தி பணம் சம்பாதிக்கவும் மட்டுமே இந்தியா வருகிறார்கள்.
சில இந்தியர்கள் வெளிநாட்டில் வேலை கிடைத்து அங்கேயே குடியுரிமை பெற்று வாழ்கின்றனர். ஒரு சிலருக்கு வெளிநாட்டில் வேலை கிடைத்தாலும் சில ஆண்டுகளில் சொந்த ஊர் திரும்பி விடுகின்றனர். சிலர் வெளிநாட்டில் பல கோடி சம்பாதிக்கிறார்கள். பலர் அங்கு வேலையின்றி வாழ்வாதாரத்தை இழக்கிறார்கள்.
குடும்பத்தை, குழந்தைகளை விட்டு கண்ணீருடன் விமானம் ஏறுபவர்கள் இது தான் என்னுடைய இறுதிப் பயணம், அடுத்து முறை ஊரோடும் குடும்பத்தோடும் இருப்பதுதான் என்று நினைப்பவர்கள். பின்னர் வெளிநாடு வந்ததும் அதற்கான முயற்சியை எடுக்காமல் வேறு பல காரியங்களில் பணத்தை செலவுசெய்து காலத்தை ஓட்டிவிட்டு அடுத்த விடுமுறையில் ஊருக்கு செல்வார்கள். இதுவே தொடர்கதையாகி 50 வயது கடந்தபின் நோயுடன் சொந்த ஊரில் குடும்பத்துடன் இறுதி காலத்தை கடத்த வேண்டிய கட்டாயம்.
கொரோனா காலகட்டத்திற்கு முன் ஓரிரு வருடங்கங்களுக்கு பிறகு சொந்த ஊருக்கு விடுமுறையில் செல்லும் பல வெளிநாட்டு வாழ் மக்கள் தற்போது 3, 4 ஆண்டுகளுக்கும் மேலாக ஊருக்கு செல்லாமல் உள்ளனர்.
அதுபோல் சிங்கப்பூரில் பணிபுரிந்து வரும் தமிழகத்தைச் சேர்ந்த பொன்வேலு சிவசக்தி என்பவர் கடந்த 3 ஆண்டுகளாக சொந்த ஊருக்கு செல்லாமல் தவித்து வருகிறார். இறுதியாக அவர் ஊருக்கு விடுமுறையில் சென்றபோது அவரது மனைவி பிரசவமாக இருந்தார். பின்னர் விடுமுறை முடிந்த மீண்டும் சிங்கப்பூர் வர, ஊரில் மனைவிக்கு ஆண் குழந்தையே பிறந்துவிட்டது.
இதனை அடுத்து கொரோனா தொற்று நோய் உலக முழுவதும் அதிகரிக்க ஊருக்கு செல்லும் சூழல் கைவிட்டு சென்றது. தற்போது அவரது மகனான துருவுக்கு இரண்டாவது பிறந்ததாளும் வரவுள்ளது. இருப்பினும் தனக்குப் பிறந்த குழந்தையை இதுவரை காண இயலாத வேதனையையும் மனக் குமுறல்களையும் பொன்வேலு நம்மிடம் கண்ணீருடன் தெரிவித்தார்.
வெளிநாட்டில் சம்பாதிப்பது ஒன்றும் அவ்வளவு எளிதல்ல. இதில் இழப்புதான் அதிகம். 30 நாள் விடுமுறையில் வந்து திருமணம் செய்து விட்டுப் மீண்டும் வெளிநாடுப் பயணம், தனக்குப் பிறந்த குழந்தையைக் காண இயலாத அவலம், இறக்கும் தருவாயில் இருக்கும் பெற்றோரை காண இயலாத கொடுமை. சொந்தப் பிள்ளைகளின் திருமணத்தை வெளிநாட்டிலிருந்து வீடியோகாலில் பார்த்து ஏங்கும் தந்தை. விமான நிலையத்தில் கண்ணீரை விட்டுக் கதறும், மனைவி, குழந்தைகள். அதைத் தாங்க முடியாமல் கண்களைத் துடைத்துக் கொண்டு விமான நிலையத்துக்குள் கடந்து செல்லும் தகப்பன். வெளிநாட்டில் உணவு, மருத்துவம் போன்ற அத்தியாவசிய பொருட்களை வாங்காமல் அதற்கான தொகையினை குடும்பத்துக்கு அனுப்பி சந்தோசம் காணும் உன்னத மனிதன் தந்தையே.
தன் குடும்பத்துக்காக தனது வாழ்க்கையை பல ஆண்கள் நிம்மதியின்றி இவ்வாறு செலவளிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.