UAE Tamil Web

“வீட்டு வேலைக்கு என்று சொல்லித்தான் அழைத்து வந்தார்கள்” – அமீரகத்தில் அடைத்துவைக்கப்பட்ட 12 இந்தியப் பெண்களின் கண்ணீர் கதை..!

Roop_

இந்தியாவில் இருந்து விசிட்டிங் விசாவில் பெண்களை வீட்டு வேலைகளுக்கு அழைத்துவந்து தவறாக நடத்திய ஏஜெண்ட் ஒருவர் அமீரகத்தில் கைது செய்யப்பட்டிருக்கிறார். அஜ்மான் இந்திய சங்கம் மற்றும் துபாயில் உள்ள இந்திய துணைத் தூதரகம் ஆகியவை இணைந்து இந்தியாவைச் சேர்ந்த 12 பெண்களை மீட்டுள்ளது.

சிறை..

துணைத் தூதரகத்திற்கு கிடைத்த தகவலின்படி 5 இந்தியப் பெண்கள் போலியான ஏஜெண்டுகளால் ஏமாற்றப்பட்டது தெரியவந்திருக்கிறது. இதுகுறித்துப் பேசிய துணைத் தூதரகத்தின் பத்திரிக்கை செய்தி மற்றும் கலாச்சார அதிகாரியான நீரஜ் அகர்வால்,” முதலில் 5 பெண்கள் என எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் மொத்தம் 12 பெண்கள் இதுபோன்று ஏஜெண்டால் சிறை பிடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அஜ்மான் இந்திய சங்கம் மற்றும் காவல்துறையின் உதவியுடன் உடனடியாக இப்பெண்கள் மீட்கப்பட்டு, பாதுகாப்பான தங்குமிடங்களுக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளனர்” என்றார்.

“துணைத் தூதரகம் அளித்த அறிவுறுத்தலின்பேரில் 21 முதல் 46 வயதுக்குட்பட்ட 12 பெண்கள் தற்போது தங்கும் விடுதிகளுக்கு அழைத்துவரப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் தங்கியிருந்த இடங்களில் சரியான உணவு வழங்கப்படவில்லை. மேலும் அவர்கள் மோசமாக நடத்தப்பட்டிருக்கின்றனர். இதுகுறித்து பொது வழக்குத் துறையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இம்மாதிரியான வழக்குகளை விசாரித்துவரும் சாயா தேவி இதில் ஆஜராக இருக்கிறார்” என அஜ்மான் இந்திய சங்கத்தின் பொதுச் செயலாளர் ரூப் சித்து தெரிவித்தார்.

மீட்கப்பட்ட பெண்களில் ஒருவர் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர். ஏனைய பெண்கள் அனைவரும் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்ட ரீதியிலான பணிகள் நிறைவடைந்ததும் அனைத்து பெண்களும் மீண்டும் இந்தியாவிற்கு அனுப்பப்படுவார்கள் எனத் தெரிகிறது.

இந்த பெண்களில் மிகவும் வயது குறைந்தவரான ஹைதராபாத்தைச் சேர்ந்த 21 வயது பெண் பேசுகையில்” நான் கடந்த செப்டம்பரில் அமீரகம் வந்தேன். அடுத்தநாளே என்னை அவர்கள் நடத்தும்விதம் பிடிக்காமல் போய்விட்டது. உடனடியாக என்னை தாயகத்திற்கு அனுப்பிவிடுங்கள் என ஏஜெண்டிடம் கேட்டேன்” என்றார்.

38 வயதான பெங்களூரைச் சேர்ந்த மற்றொரு பெண், ” பல இடங்களில் என்னை பணிபுரிய சொன்னார்கள். நான் மறுத்ததைத் தொடர்ந்து என்னை 6 பெண்கள் இருந்த அறைக்குள் அடைத்து வைத்தார்கள். போதிய உணவும் கொடுக்கவில்லை” என்றார்.

இ – மைக்ரேட் (e-Migrate) மூலமாகவே வீட்டு வேலை செய்யும் பணியாளர்கள் அமீரகத்திற்கு வரவேண்டும் எனவும் விசிட்டிங் விசாவில் வருவது பல சிக்கல்களை உருவாக்கும் எனவும் நீரஜ் அகர்வால் தெரிவித்தார்.

“வீட்டு வேலைகளுக்காக அமீரகம் வருவோர் பின்பற்றவேண்டிய இ – மைக்ரேட் (e-Migrate) எனப்படும் திட்டம் குறித்து எங்களுக்கு போதிய அறிவு இருந்திருக்கவில்லை. நான் இதற்குமுன்னர் சவூதி மற்றும் ஓமானில் பணிப்பெண்ணாக பணிபுரிந்திருக்கிறேன். விசிட்டிங் விசாவில் அங்கு சென்றதும் அங்கு எங்களுக்கான பணிகளில் நாங்கள் சேர்வோம். இதுவே வழக்கம். விமான நிலையத்தில் தான் எங்களுக்கு டிக்கெட்டும் விசாவும் வழங்கப்படும். வளைகுடா நாடுகளுக்குச் சென்றதும் ரெசிடென்சி விசா மற்றும் லேபர் காண்ட்ராக்ட் ஆகியவை பின்னர் அளிக்கப்படும். ஏஜெண்டுகளுக்கு அதிக கமிஷன் கிடைப்பதால் எங்களுக்கு இ – மைக்ரேட் குறித்து அவர்கள் எங்களிடம் தெரிவிப்பதில்லை” என பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவர் தெரிவித்தார்.

Roop_
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap