கேரள அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள தங்கக் கடத்தல் வழக்கில் அம்மாநில முதல்வர் பினராயி விஜயனை காப்பாற்ற முயற்சி நடப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீசன் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டில் இருந்து கேரளாவுக்கு தங்கம் கடத்தி வரப்பட்டதாக எழும் குற்றச்சாட்டின் பேரில் அம்மாநில அரசு நிறுவனத்தில் பணியாற்றிய ஸ்வப்னா சுரேஷ் கைது செய்யப்பட்டார். அமீரக தூதரகத்தின் பெயரைப் பயன்படுத்தி இந்த முறைகேட்டில் ஈடுபட்டது காவல்துறை விசாரணையில் தெரியவந்தது.
இந்த முறைகேட்டில் கேரள முதல்வரின் முன்னாள் முதன்மைச் செயலாளர் சிவசங்கருக்கு தொடர்பு இருப்பதாகக் கூறப்பட்டதை அடுத்து அவரும் கைதானார். பின்னர் ஜாமீனில் வெளிவந்த அவர், ஸ்வப்னா தமக்குத் துரோகம் செய்துவிட்டதாக தெரிவித்தார்.
ஆனால் சிவசங்கர் தான் தம்மை தேசிய புலனாய்வு முகமையிடம் சிக்க வைத்து துரோகம் செய்துவிட்டதாக ஸ்வப்னா சுரேஷ் தெரிவித்துள்ளார்.
சிவசங்கருக்கு பரிசாகவும் பணமாகவும் ஏராளமான உதவிகள் செய்துள்ளேன். ஒரு கட்டத்தில் பணியில் இருந்து ஓய்வு எடுத்து துபாயில் இருவரும் தனியாக வாழ்க்கை நடத்தலாம் என சிவசங்கர் என்னிடம் கூறினார். தூதரகம் மூலம் பல முறைகேடான செயல் நடப்பது சிவசங்கருக்குத் தெரியும் என்று ஸ்வப்னா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ஸ்வப்னா சுரேஷ் வெளியிட்டுள்ள தகவல்களால் கேரள அசியல் வட்டாரத்தில் பரபரரப்பை ஏற்படுத்தி உள்ளதாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அம்மாநில எதிர்க்கட்சித் தலைவர் சதீசன், முதல்வர் பினராயி விஜயனை சாடியுள்ளார்.
மேலும் முதல்வர் பினராயி விஜயனின் தலைமை அலுவலகத்தில் சமூக விரோத செயல்கள், பொருளாதார குற்றங்கள், தேசத் துரோக குற்றங்கள் நடந்து இருப்பது தெரியவந்துள்ளதாக சதீசன் தெரிவித்துள்ளார்.
