இங்கிலாந்தில் ஏழு ஆண்டுகள் பணியாற்றிய கேரள இளைஞர் ஃபைசல் யூசுப் கடந்த 2018 ஆம் ஆண்டு ஆலப்புழாவில் தள்ளு வண்டியில் ‘தி சாய் வாலா’ என்ற தேநீர் கடையை தொடங்கினார். தற்போது வெளிநாடுகளிலும் தேநீர் கடை கிளைகளை திறக்கவுள்ளார்.
மும்பையில் சில ஆண்டுகள் ஃபைசல் யூசுப் பணி புரிந்துள்ளார். பின்னர் துபாயில் பணியாற்றிய அவர், அங்கிருந்து இங்கிலாந்து சென்று அங்கு ஒரு காஃபி நிறுவனத்தில் ஏழு ஆண்டுகள் வேலை பார்த்தார்.
இங்கிலாந்திலிருந்து இந்தியா திரும்பிய ஃபைசல், வித்தியாசமாக முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என்று நினைத்தபோது தள்ளுவண்டி தேநீர் கடை நடத்த முடிவு செய்தார்.
ஓரே ஒரு தள்ளு வண்டியில் 50 வகையான தேயிலை வகைளைக் கொண்டு தேநீர் தயாரித்து விற்க ஆரம்பித்தார். தேநீர் வகைகளின் அருமையான சுவையால் வியாபாரம் பெருகியது. இதையடுத்து கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா என மூன்று மாநிலங்களில் ஐம்பதுக்கும் மேற்பட்ட கிளைகளைத் தொடங்கினார்.
இப்போது துபாயிலும் இவரது தள்ளுவண்டி தேநீர்க் கடையின் கிளை திறக்கப்பட உள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியா முழுவதும் ஆயிரம் கிளைகளைத் தொடங்குவதுடன், ஓமன், கத்தார், பஹ்ரைன் உள்ளிட்ட நாடுகளிலும் ‘தி சாய் வாலா’ கிளைகளை பார்க்க முடியும் என்கிறார் ஃபைசல்.
