UAE Tamil Web

வெள்ளத்தில் தத்தளிக்கும் கேரளா: குடும்பத்தினை நினைத்துத் துயரில் தவிக்கும் அமீரக வாழ் கேரள தொழிலாளர்கள்..!

NAT-KERALA-FLOOD-

இந்த வருடமும் கேரளாவை வெள்ளம் கருணையின்றி தாக்கியிருக்கிறது. கடும் மழை காரணமாக அங்கே போக்குவரத்து, தகவல் தொடர்பு ஆகியவை ஸ்தம்பித்திருக்கின்றன. நிலைமையை சரிசெய்ய போர்க்கால அடிப்படையில் முதல்வர் பினராயன் விஜயன் தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் அமீரகத்தில் வசித்துவரும் கேரளாவைச் சேர்ந்த மக்கள் கேரளாவில் வசித்துவரும் தங்களது பெற்றோர் மற்றும் உறவினர்களை நினைத்து துயரில் தவித்து வருகின்றனர்.
துபாயில் வசித்துவரும் சஜேஷ் -ன் சொந்த ஊர் கேரளாவின் பத்தனம்திட்டா ஆகும். வெள்ளத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்ட இடங்களுள் சஜேஷின் வீடு அமைந்திருந்த பெருநாடும் ஒன்று.
பம்பை நதி பெருக்கெடுக்கும் பிராந்தியம் இது என்பதால் பருவமழை காலங்களில் இங்கே வெள்ள எச்சரிக்கை விடப்படுவதுண்டு. கடந்த 2009 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தின் போதே சஜேஷின் பெற்றோர் கடுமையாக பாதிக்கப்பட்டனர். வீட்டின் தரைத் தளத்தில் சஜேஷின் பெற்றோரும் மேல்தளத்தில் கடை ஒன்றும் இயங்கிவந்திருக்கிறது.
மொத்த வீடும் கடந்த வெள்ளத்தின் போது பாதிப்பிற்குள்ளான நிலையில் மீட்புப்படை சஜேஷின் பெற்றோரை மீட்டிருக்கிறது. கூடுதலாக இரண்டாவது தளம் கட்டிய பின்னரும் வயது மூப்பின் காரணமாக மேலே வசிக்க பெற்றோர் மறுத்துவிட்டதாக சஜேஷ் தெரிவித்தார்.
இதுகுறித்துப் பேசிய அவர்,” எனது பெற்றோரை என்னால் தொடர்புகொள்ள முடியவில்லை. அவர்கள் நலமாக இருப்பார்கள் என நம்புகிறேன். இறைவனின் அருளால் அவர்களை நான் மீண்டும் சந்திப்பேன்” எனக் கவலையுடன் குறிப்பிட்டார்.
சஜேஷ் போன்று பலரும் கேரள வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட தங்களது உறவினர், பெற்றார், குழந்தைகளை நினைத்து கவலையில் தவித்து வருகின்றனர்.
NAT-KERALA-FLOOD-
0 Shares
Share via
Copy link