அபுதாபியில் 4 வயது சிறுமி தனது பெற்றோருடன் வெளியில் சென்றுள்ளார். பொது இடத்தில் வைக்கப்பட்டிருந்த சானிடைசர் மிஷினை மிதித்தபோது எதிர்பாராத விதமாக அதிக அளவிலான சானிடைசர் சிறுமியின் கண்களை பதம் பார்த்தது. இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், உடனடியாக அவரை Cleveland Clinic மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு திறக்க முடியாமல் பரிதவித்த சிறுமியின் கண்களை பரிசோதித்த மருத்துவர்கள் உடனடியாக தீவிர சிகிச்சை அளித்தனர். கண் மருத்துவ வல்லுநர்களின் தொடர் சிகிச்சைக்குப் பிறகு சிறுமியின் கண்களில் விழுந்த சானிடைசர் அகற்றப்பட்டது. இருப்பினும் கண் எரிச்சலால் பாதிக்கப்பட்டுள்ள சிறுமிக்கு மாற்று சிகிச்சைகளும் வழங்கப்பட்டுள்ளன. மேலும் சிறுமியை மருத்துவ கண்காணிப்பில் வைத்திருக்கும்படி பெற்றோர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. சானிடைசரால் பாதிக்கப்பட்டதும் அலட்சியமின்றி உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்ததால் சிறுமியின் கண்கள் பெரிய ஆபத்தின்றி தப்பியது
மருத்துவர்கள் செல்வது என்ன?
சானிடைசரில் 60% அதிகமாக ஆல்கஹால் இருந்தால் மட்டுமே அவற்றால் கொரோனா போன்ற நோய் கிருமிகளை அழிக்க முடியும். இதனால் பலரும் அல்கஹால் அதிகம் உள்ள சானிடைசர்களையே பயன்படுத்துகின்றனர். பொதுவெளியிலும் அவைகள் தானியங்கி மிஷின்களில் வைக்கப்படுகிறது. குழந்தைகள் இதனை பயன்படுத்தும்போது மிகுந்த எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். குறைந்த அளவிலான சானிடைசர்களை வழங்கி அது காய்ந்த பிறகு முகத்தில் கை வைக்க பெற்றோர்கள் அனுமதிக்க வேண்டும். சானிடைசர்களை ஒருவேளை குழந்தைகள் கண்களில் போட்டுக்கொண்டால் உடனடியாக தண்ணீரை கொண்டு கண்களை கழுவி தாமதமின்றி மருத்துவமனையை நாட வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்
பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் அட்வைஸ்!
வழக்கமாக தனது குழந்தையின் கைகளை கழுவ சோப்பையே பயன்படுத்த அறிவுறுத்துவேன். சானிடைசர்களை தவிர்த்து வந்தேன். பொது வெளியில் தானியங்கி சானிடைசர் மெஷினை கண்டதும் உற்சாக மிகுதியில் குழந்தை ஓடிச் சென்று அதனை மிதிக்க சானிடைசர் நேரடியாக கண்களில் விழுந்து விட்டது.
குழந்தைகளுக்கு அதிகளவில் சானிடைசர்களை வழங்கக்கூடாது. குறிப்பாக பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள தானியங்கி மெஷின்களிடம் இருந்து கவனமாக இருத்தல் அவசியம். குழந்தைகளை வீட்டிலும் வெளியிலும் பத்திரமாக பார்த்துக் கொள்வது நமது கடமை என பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் கூறியுள்ளார்.
இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் சானிடைசர்களை தவறுதலாக குடித்து பலர் உயிரை விட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
