மஜீத் அல் ஃபுட்டைம் குழுமத்தின் தலைவரும் அமீரகத்தின் முக்கிய தொழிலதிபர்களில் ஒருவருமான மஜீத் அல் ஃபுட்டைம் நேற்று காலமானதாக அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். சில்லறை வர்த்தகம், ரியல் எஸ்டேட் என பல்வேறு துறைகளில் கால்பதித்து சாதனைபுரிந்த மஜீத் 1935 ஆம் ஆண்டு பிறந்தவர்.
இந்தியாவின் அலிகார் பல்கலைக்கழகத்தில் மெக்கானிக்கல் என்ஜீனியரிங் படித்தார். பின்னர் நாடு திரும்பியவர் வங்கிப் பணியில் சேர்ந்தார். இவரது தந்தை முகமது மற்றும் மாமா ஹமாத் ஆகியோர் வர்த்தக தொழிலில் ஈடுபட்டு வந்தனர்.
மரம், முத்துக்கள், வாசனைத் திரவியம் ஆகியவை இவர்களது முக்கிய வர்த்தகப் பொருளாக இருந்தது. இப்படியான பின்புலத்தில் வந்த மஜீத்திற்கு சொந்தத் தொழில் துவங்க வேண்டும் என ஆசையிருந்ததில் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

கடுமையாக உழைத்தார். சிறிய மற்றும் சில்லறை வர்த்தகத்தில் ஈடுபட்டு அனுபவப்பாடம் பயின்றார். “மக்கள் ஷாப்பிங் செய்யும்போது மகிழ்ச்சியாக இருத்தல் அவசியம்” இதைப் பல மேடைகளில் பேசியிருக்கிறார். அப்படித்தான் தனது முதல் அடியை எடுத்துவைத்தது மஜீத் அல் ஃபுட்டைம் குரூப்.
இன்று மத்திய கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் 27 ஷாப்பிங் மால்கள், 13 ஹோட்டல்கள், 4 ஒருங்கிணைந்த நகரத் திட்டங்கள் (அரசுத் துறையுடன் இணைந்து) ஆகியவற்றை இந்தக் குழுமம் நிர்வகித்து வருகிறது. இதுமட்டுமல்லாமல் ரியல் எஸ்டேட் துறையிலும் இக்குழுமம் ஈடுபட்டுவருகிறது.
இவர்களது முக்கிய ஷாப்பிங் மால்கள்
- மஜீத் அல் ஃபுட்டைம் மால்கள்
- மால் ஆஃப் எகிப்து
- சிட்டி செண்டர் மால்கள்
- சிட்டி செண்டர் சமூக ஷாப்பிங் மால்கள்
- ஷார்ஜா அரசுடன் இணைந்து நடத்தப்படும் 5 மால்கள்
மத்திய கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் செயல்பட்டுவரும் 30 கேரிஃபோர் ஷாப்பிங் செண்டரை மஜீத் குழுமம் இயக்கிவருவது குறிப்பிடத்தக்கது.
பிரபல ஃபோர்ப்ஸ் இதழின் அறிக்கையின்படி அரபு நாடுகளின் பணக்காரர்கள் பட்டியலில் மஜீத் முதலிடம் வகிக்கிறார். இவருடைய சொத்துமதிப்பு 4 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும். தற்போது இவருடைய மகன் தாரிக், மஜீத் குழுமத்தின் இயக்குனராக செயல்பட்டுவருகிறார்.

அமீரக வளர்ச்சியில் மஜீத் அவர்களுடைய பங்களிப்பு மிக முக்கியமானதாகும். இவருடைய மறைவை முன்னிட்டு அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாயின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம், அபுதாபியின் பட்டத்து இளவரசரும் அமீரக ஆய்தப்படையின் தலைமைத் துணைத் தளபதியுமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் மற்றும் துபாயின் பட்டத்து இளவரசரும் துபாய் நிர்வாகக் குழுவின் தலைவருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் உள்ளிட்ட அரச குடும்பத்தினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.