UAE Tamil Web

அவரு இல்லைனா.. அமீரகமே இல்ல.. அமீரகத்தின் தந்தை என்றழைக்கப்படும் ஷேக் சயீத்.. யார் இவர்?

-Sheikh-Zayed-Bin-Sultan-Al-Nahyan_

அமீரகம். விண்ணை முட்டும் கட்டிடங்கள், எங்கு திரும்பினாலும் சுற்றுலா துறையின் மைல்கள், புதிய புதிய முதலீட்டாளர்களின் வருகை, உலகத் தலைவர்களின் சந்திப்புகள் என பூமிப்பந்தின் முக்கிய இடமாக இன்று அறியப்படுகிற இந்த நாடு ஒரு காலத்தில் மீன் பிடித்தலையும் முத்துக்கள் விற்பனையையும் மட்டுமே தங்களது வாழ்வாதாரத்திற்கான தொழிலாக கொண்டிருந்தது.

உட்கட்டமைப்பு என்றெல்லாம் எதுவுமே இல்லை. அப்போது இருந்த அரச குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கே எழுதுதல் மற்றும் வாசித்தல் மட்டுமே கல்வியாக கிடைத்து வந்தது. இதெல்லாம் 1920களின் கதை.

ஷேக் சயித் அவர்களின் பிறப்பு

1922 முதல் 1926 வரை அபுதாபியில் ஆட்சியாளராக இருந்த ஷேக் சுல்தான் பின் சயத் அல் நஹ்யான் அவர்களுடைய நான்காவது மகனாக 1918 ஆம் ஆண்டு பிறந்தவர் ஷேக் சயீத் பின் சுல்தான் அல் நஹ்யான். ஆட்சியாளரின் மகன் என்ற சிறப்பு அந்தஸ்து எல்லாம் கிடையாது. எல்லோரையும் போல வாசித்தல் எழுதுதல் பயிற்சி, இஸ்லாம் குறித்த அறிஞரின் சொற்பொழிவுகளை கேட்டல் ஆகியவற்றிலேயே ஷேக் ஷேக் ஆரம்ப நாட்கள் கழிந்தன.

அந்தக் காலத்தில் போக்குவரத்து என்றால் ஒட்டகங்கள் மட்டும் தான். அல்லது சில நேரங்களில் படகுகளைப் பயன்படுத்துவார்கள். சுட்டெரிக்கும் வெயில், நொடிகளில் இடம்மாறும் மேகங்கள், எலும்புகளை உறையவைக்கும் குளிர் என அசாதாரண காலநிலை அபுதாபியை எப்படி ஒரு வெற்றிகரமான தொழில் நகரம் ஆக்குவது என்பதை மேலும் கடினமான கேள்வியாக்கியது.

ஷேக் சயீத் தனது ஆரம்ப நாட்களில் அபுதாபியைச் சேர்ந்த பழங்குடி மக்களிடம் நெருங்கிப் பழகத் தொடங்கினார். பின்னாளில், வாழ்நாள் முழுவதும் தனது விருப்பப் பொழுதுபோக்கான ஃபால்கன்ரி எனப்படும் பருந்து வளர்த்தலை அவர்களிடமிருந்தே கற்றதாக பல இடங்களில் ஷேக் சயீத் குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல், அபுதாபியில் கலாச்சார விழுமியங்களைக்கொண்ட வெவ்வேறுவிதமான பழங்குடி மக்களை அவர் பார்த்தார். அவர்களுடன் நெருங்கிப் பழகினார்.

முதல் பதவி

1946ஆம் ஆண்டு அல் அய்ன் பகுதியை மையப்படுத்திய அபுதாபியின் கிழக்குப் பிராந்தியத்தின் ஆட்சியாளரின் பொறுப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார் ஷேக் சயீத். அப்போது பகுதிக்கு அருகே 6 கிராமங்கள் இருந்தன. அவற்றின் மேலாண்மைக்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார்.

Sheikh Zayed

உலகளவில் அமீரகத்தை தலைநிமிரச் செய்யும் ஒரு மாபெரும் வரலாற்று சம்பவத்தின் விதை விழுந்த இடம் அதுதான். நாட்கள் செல்லச் செல்ல மக்களின் வருமானத்தை அதிகரிக்கும் பல்வேறு முயற்சிகளில் இறங்கினார். அப்போதுதான் கல்வி மட்டுமே மக்களை நீடித்த வளர்ச்சி எனும் ராஜபாட்டை அழைத்து வரும் என்பதை உலகறியச் செய்யும் விதமாக நவீன பள்ளி ஒன்றினை தனது உறவினர்களின் முதலீட்டுடன் ஆரம்பித்தார் ஷேக் சயீத்.
கூடவே சிறிய அளவிலான தொழில்களை துவங்கவும் மக்களை ஊக்குவித்தார். மக்களின் அடிப்படைத் தேவையான உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைய வேண்டும் என்பதில் தெளிவாக இருந்த ஷேக் சயீத் அபுதாபி பகுதியில்  நன்னீர் பகுதி உரிமையாளர்களிடம் பேசி விவசாயத்தை அதிகப்படுத்த பல முக்கிய முயற்சிகளை மேற்கொண்டார்.

அபுதாபி ஆட்சியாளர்

1966 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அபுதாபியில் ஷேக் சயீத் ஆட்சியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அபுதாபியை வளர்ச்சிபெற்ற பிராந்தியமாக உருவாக்க என்னென்ன வழிகள் இருக்கின்றன என்பதை சிந்தித்தார். அல் அய்ன் பிராந்தியத்தின் பொறுப்பாளராக இருந்த சமயத்தில் அவருக்கு கிடைத்த அனுபவங்கள் இப்போது பெரிதும் பயன்பட்டன என்றே சொல்லவேண்டும்.

Sheikh Zayed with a bird

அமீரகத்தில் கச்சா எண்ணெய் ஏற்றுமதி 1962-ஆம் ஆண்டு துவங்கியது அதன் மூலம் கிடைக்கும் வருவாயைக் கொண்டு தனது கனவு நகரமான அபுதாபியை கட்டமைக்க கிளம்பினார். போக்குவரத்திற்கு ஒட்டகங்களை மட்டுமே நம்பியிருந்த மக்களுக்கு பள்ளிகள், புதிய வீடுகள், மருத்துவமனைகள், நகரமெங்கும் தார் சாலைகள் என “அமீரகத்தின் தலையெழுத்தை மாற்றிக் காட்டப் பிறந்தவன் நான்” என தனது செயல்கள் மூலமாக உலகிற்கு அறிவித்தார் ஷேக்.

டாட்டா சொன்ன பிரிட்டிஷார்

அரேபிய வளைகுடாவில் இருந்து தங்களது படைகளை விலக்கிக் கொள்வதாக ஆங்கிலேயே அரசு அறிவித்தது. ஆண்டு 1968. இந்தப் பணிகள் அடுத்த சில ஆண்டுகளுக்கு நீடித்தன. 1921ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் முழுமையாக அரேபிய தீபகற்பத்தை விட்டு வெளியேறினர்.

The Establishment of the United Arab Emirates - National Archives of the United Arab Emirates — Google Arts & Culture

கிட்டத்தட்ட அப்போதே அமீரகம் எனும் கருத்தாக்கத்தின் மீது உறுதியாக இருந்தார் ஷேக் சசயீத். அவரைப்போலவே துபாயின் ஆட்சியாளராக இருந்த ஷேக் சயீத் பின் ரஷித் அல் மக்தூம் அவர்களும் ஒருங்கிணைந்த அமீரக தேசத்தை வளர்த்தெடுக்க விரும்பினார். இதன் பயனாக அபுதாபி, துபாய், ஷார்ஜா, அஜ்மான், ராஸ் அல் கைமா, உம் அல் குவைன் மற்றும் புஜைரா ஆகிய ஆட்சியாளர்களிடம் ஐக்கிய அரபு அமீரகத்தின் தேவைகளை இரு தலைவர்களும் எடுத்துரைத்தனர். இதன் பலனாக 1971 ஆம் ஆண்டு டிசம்பர் 2 ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகம் உருவானது. அதன் தலைவராக ஷேக் சயீத் பின் சுல்தான் அல் நஹ்யான் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மக்களின் உரிமைகள் காக்கப்பட வேண்டும், அவர்களுக்கு அரசு அளிக்க வேண்டிய பாதுகாப்பு, உரிமைகள் ஆகியவை எந்த நேரத்திலும் தடையின்றி கிடைத்திட வேண்டும் என்பதில் ஷேக் சயீத் மிகத் தெளிவாக இருந்தார். இதன் காரணமாகவே அவர் ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளிலும் அமீரகத்தின் தலைவராக சக ஆட்சியாளர்களினால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மனிதத்தை நேசித்த மகான்

ஷேக் சயீத் தன்னுடைய பேட்டிகளில் திரும்பத் திரும்ப குறிப்பிடப்படும் குறிப்பிடும் ஒரு விஷயம் “மனிதத்திற்கு எதிராக செயல்படும் யாரும் எந்த மதத்தையும் சொந்தம் கொண்டாட முடியாது. குறிப்பாக இஸ்லாத்தின் பெயரில் நிகழ்த்தப்படும் வன்முறைகள் அனைத்திற்கும் எதிராக அமீரகம் தொடர்ந்து குரல் கொடுக்கும். முஸ்லிம் மற்றும் முஸ்லிம் அல்லாத நபர்கள் ஒருங்கிணைந்து வாழவும் சக மனிதனாய் ஒன்றிணையும் எவையெல்லாம் தடுப்பு காரணிகளாக இருக்கிறதோ அவை அனைத்திற்கும் நான் எதிரானவன்” என உலக மேடையில் தன்னுடைய நிலைப்பாட்டை தெளிவாக எடுத்துரைத்தவர் ஷேக் சயீத்.

Sheikh Zayed bin Sultan Al Nahya

கொசோவா, ஆப்கானிஸ்தான், ஈராக் ஆகிய நாடுகளில் உள்நாட்டு போர் உச்சம் அடையும்போது பாதிக்கப்பட்ட மக்களுக்காக அபுதாபியில் அடைக்கலம் கொடுக்க முன் வந்தவர் ஷேக். இன்று வரையிலும் உலகத்தின் எந்த மூலையில் ஒரு தனிநபர் பசிக்காகவும் போட்டுக் கொள்ள ஒரு துணை வேண்டியும் கண்ணீருடன் நிற்கும்போதும் அவர்களுக்கு உதவ அமீரகம் எப்போதும் தயாராக இருக்கிறது. இதற்கான விதையை இந்த மண்ணில் விதைத்தவர் ஷேக் சயீத் என்றே சொல்ல வேண்டும்.

மக்களின் முன்னேற்றமே நாட்டின் வளர்ச்சிக்கு வித்திடும் என்பதை தன்னுடைய அனுபவத்தின் மூலமாக கண்டறிந்த இவர், ஆட்சிப் பொறுப்பிற்கு வந்த பின்னரும் ஒவ்வொரு எமிரேட்டில் உள்ள பழங்குடியின மக்களின் பிரதிநிதிகளை அமைச்சரவை கூட்டத்திற்கு அழைத்து அவர்களுடைய தேவைகள் குறித்து விவாதித்தார். இப்படி அமீரகத்திற்கு தேவைப்படும் ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்ததன் காரணமாகவே அவரை அமீரகத்தின் தந்தை என மக்கள் பாசத்துடன் அழைக்கின்றனர்.

மறைவு

ஷேக் சயீத், கடந்த 2004 ஆம் ஆண்டு மரணமடைந்த போது அமீரகமே அவருக்காக கண்ணீர் சிந்தியது. மக்கள் ஒவ்வொருவரும் தங்களுடைய குடும்பத்தில் ஏற்பட்ட தனிப்பட்ட இழப்பாகவே அவருடைய மரணத்தை கருதினர். தேசமே இருளில் மூழ்கிய அந்த நேரத்தில் தான் அமீரகத்தின் புதிய தலைவராக ஷேக் கலீஃபா பின் சயத் அல் நஹ்யான் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Third Council (Part Three) - Zayed And The Concept of Happiness - Al Tawasol International Tent

இன்றைய நவீன உலகில் உலகில் எந்த நாட்டுடனும் எந்தத் துறையிலும் போட்டி போடும் அளவிற்கு அமீரகம் வளர்ந்துள்ளது. இதற்கு முக்கியக் காரணம் ஷேக் சயீத் அவர்கள் தான். அமீகத்தின் வரலாற்றை ஷேக் சயீத் பின் சுல்தான் அல் நஹ்யான் அவர்களின் பெயரில்லாமல் எழுதிவிட முடியாது. அவருடைய நேர்மையான சிந்தனையும் மனிதாபிமானத்துடன் கூடிய தொலைநோக்குப் பார்வையும் வரலாற்றில் என்றென்றும் அவரை ஓர் உலகத் தலைவராக முன்னிறுத்தும்.

-Sheikh-Zayed-Bin-Sultan-Al-Nahyan_
26 Shares
Share via
Copy link