UAE Tamil Web

அடுத்த 50 வருடத்திற்கான திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்த அமீரக தலைவர்கள்..!

UAE Leaders

பெடரல் துறைகள் மற்றும் அமைச்சகங்கள் ஆகியவற்றின் இயங்கு திறனை மேம்படுத்தும் நோக்கில் புதிய தேசிய கொள்கைக்கு அமீரக தலைவர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர். நாட்டின் முக்கிய துறைகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்ல தேவையான திட்டங்களை இந்த தேசிய கொள்கை உள்ளடக்கியதாகும்.

- Advertisment -

நாட்டின் அனைத்து துறைகளிலும் நிலையான பொருளாதார மேம்பாட்டை அடையும் நோக்கில் இந்த திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது.

2021 ஆம் ஆண்டிற்கான மந்திரி சபைக்கூட்டம் இன்று நிறைவு பெற்றதையடுத்து இந்த முடிவு வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த கூட்டத்திற்கு அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாயின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் மற்றும் அபுதாபியின் பட்டத்து இளவரசரும் அமீரக ஆயுதப்படையின் தலைமைத் துணைத் தளபதியுமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் அவர்களும் தலைமை தாங்கினார்கள். இதில் அமைச்சர்கள், அரசு மூத்த அதிகாரிகள் மற்றும் முக்கியஸ்தர்கள் ஆகியோர் இணைந்து எதிர்கால மேம்பாட்டுத் திட்டத்தின் வரைவை முன்வைத்தனர்.

மேம்படுத்தப்பட்ட பணி முறைகள் மற்றும் தொழில்நுட்பத்தின் உதவியோடு உலகளாவிய டிஜிட்டல் மாற்றத்தில் அமீரகம் முன்னிலை பெறும் அடிப்படையில் இந்த திட்டமானது வடிவமைக்கப்பட்டுள்ளது. அமீரக துறைகளிடையே சரிசமமான வளர்ச்சியை உறுதிப்படுத்துவதே இதன் நோக்கமாகும்.

50 வருடத்திற்கான வளர்ச்சித் திட்டம்

இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தேசிய அளவிலான யோசனைகள் முன்வைக்கப்பட்டன. அடுத்த 50 வருடங்களுக்கு நாட்டினை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச்செல்லும் வகையில் இந்த வரைவு தயாரிக்கப்பட்டிருக்கிறது. நாட்டின் பல்வேறு துறைகளில் மேம்பட்ட வளர்ச்சியை சாத்தியமாக்கும் நோக்கிலும் இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

அமைச்சர்கள், மூத்த அரசு அதிகாரிகள் மற்றும் முக்கியஸ்தர்கள் கலந்துகொண்ட இந்த கூட்டத்தில் பொருளாதாரம், சுகாதாரம், வர்த்தகம், கல்வி, சமூக மேம்பாடு மற்றும் ஊடகம் போன்ற முக்கிய துறைகளை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச்செல்ல தேவையான பல்வேறு யோசனைகள் முன்வைக்கப்பட்டன. வளர்ச்சிக்கான வாய்ப்புகளையும் அரசின் திறனை அதிகரிப்பதையும் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

தேசிய மற்றும் உள்ளூர் திட்டங்களை வலுப்படுத்த தேவையான இயங்கு முறைகள் குறித்தும் கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் விவாதித்தனர். பணிக்குழுக்களை ஆதரிப்பதும், சிறந்த உலகளாவிய நடைமுறைகளைப் பயன்படுத்துவதும் ஐக்கிய அரபு அமீரகத்தை மிகவும் சுறுசுறுப்பான மற்றும் தகவமைப்பு நாடுகளில் ஒன்றாக மாற்றுவதற்கும் அரசாங்கப் பணிகளில் மாற்றத்தை உருவாக்குவதை நோக்கமாகவும் கொண்டு இயங்க திட்டமிடப்பட்டுள்ளது. தேசிய பொருளாதாரத்தை உயர்த்த பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் திட்டங்கள் உருவாக்கப்படும், மேலும் கூட்டாட்சி மற்றும் உள்ளூர் நிறுவனங்களின் பணிகளை ஒன்றிணைக்க ஒரு ஒருங்கிணைந்த அமைப்பு உருவாக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.