UAE Tamil Web

லூலூ ஷாப்பிங் மால் உரிமையாளர் யூசப் அலிக்கு அறுவைசிகிச்சை – 25 மருத்துவ நிபுணர்கள் பங்கேற்பு – விரைந்து குணமாக அமீரக தலைவர்கள் வாழ்த்து..!

Yousuf ali

லூலூ குழுமத்தின் தலைவர் திரு. யூசப் அலிக்கு அபுதாபியில் உள்ள புர்ஜில் மருத்துவமனையில் தண்டுவட அறுவைசிகிச்சை கடந்த செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற்றது.

இந்நிலையில் அவர் நலமாக இருப்பதாகவும், அவரது உடல்நிலை விரைந்து தேறிவருவதாகவும் லூலூ குழுமத்தின் தகவல்தொடர்பு இயக்குனர் திரு.நந்தகுமார் தெரிவித்திருக்கிறார்.

“டாக்டர். அம்ர் அல் ஷவர்பி தலைமையிலான 25 நிபுணர் குழு இந்த அறுவைசிகிச்சையை வெற்றிகரமாக நடத்தியிருக்கின்றனர். அவர் தற்போது பூரணமாக குணமடைந்துள்ளார்” என நந்தகுமார் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த உறவினரைப் பார்க்க கேரளா சென்றிருந்தார் யூசப். அப்போது கேரளாவின் கொச்சியின் எல்லைப்புறத்தில் உள்ள பணக்காட் என்னுமிடத்தில் யூசப் மற்றும் 6 பேர் ஹெலிகாப்டரில் பயணம் செய்திருக்கிறார்கள். கனமழை மற்றும் அதிவேகத்தில் காற்று வீசியதால் இவர்கள் சென்ற ஹெலிகாப்டர் உடனடியாக தரையிறக்கப்பட்டது.

இதனையடுத்து கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட யூசப் அலி அபுதாபி ஆட்சியாளர் ஏற்பாடு செய்த சிறப்பு விமானம் மூலமாக அபுதாபி வந்தடைந்தார்.

யூசப் அலியின் மருமகனும் புர்ஜில் மருத்துவமனையின் தலைவருமான டாக்டர். சம்ஷீர் வயலில் ஹெலிகாப்டர் விபத்து நிகழ்ந்ததை அறிந்து கேரளா சென்று, யூசப் அலியை உடனடியாக அபுதாபி அழைத்துவந்தார்.

சிகிச்சை பெற்றுவரும் யூசுப் அலி விரைந்து நலம்பெற அமீரகத்தின் அனைத்து எமிரேட் ஆட்சியாளர்களும் வாழ்த்து தெரிவித்திருக்கின்றனர். அதேபோல, இந்திய அமைச்சர்கள் மற்றும் கேரள அரசியல் தலைவர்கள் மற்றும் பல்வேறு மதத் தலைவர்கள் யூசப் அலி நலம்பெற வாழ்த்துவதாகத் தெரிவித்திருக்கின்றனர்.

ஈகை குணம் கொண்ட யூசப் சமீபத்தில் அமீரக அரசால் துவங்கப்பட்ட 100 மில்லியன் மீல்ஸ் என்னும் ஏழைகளுக்கு உணவு வழங்கும் திட்டத்திற்கு 10 லட்சம் திர்ஹம்ஸ் நிதியுதவி அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Yousuf ali
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap