UAE Tamil Web

லூலூ ஷாப்பிங் மால் உரிமையாளர் யூசப் அலி அபுதாபி திரும்பினார்..!

Youssuf ali

லூலூ குரூப் இண்டர்நேஷனல் குழுமத்தின் தலைவர்  M.A. யூசப் அலி இன்று அபுதாபி திரும்பியிருக்கிறார். சமீபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த உறவினரைப் பார்க்க கேரளா சென்றிருந்தார் யூசப்.

இந்நிலையில் நேற்று கேரளாவின் கொச்சியின் எல்லைப்புறத்தில் உள்ள பணக்காட் என்னுமிடத்தில் யூசப் மற்றும் 6 பேர் ஹெலிகாப்டரில் பயணம் செய்திருக்கிறார்கள். அப்போது கனமழை மற்றும் அதிவேகத்தில் காற்று வீசியதால் இவர்கள் சென்ற ஹெலிகாப்டர் உடனடியாக தரையிறக்கப்பட்டது.

இதனையடுத்து கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட யூசப் அலி இன்று சிறப்பு விமானம் மூலமாக அபுதாபி வந்தடைந்தார்.

அவர் தனது வீட்டினரோடு ஓய்வில் இருப்பதாக லூலூ குரூப் இண்டர்நேஷனல் குழுமத்தின் சந்தைப்படுத்துதல் மற்றும் தகவல் தொடர்புத்துறை இயக்குனர் திரு.நந்தகுமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்துப் பேசிய நந்தகுமார்,” அவருக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை. வானிலை மோசமாக இருந்ததால் அனுபவம் மிகுந்த விமானிகள் ஹெலிகாப்டரை பத்திரமாக தரையிறக்கினர். இதனால் சிறிய அதிர்ச்சியடைந்திருக்கிறார். மற்றபடி, அவர் பரிபூரண உடல்நலத்துடன் இருக்கிறார்” எனக் குறிப்பிட்டார்.