நேற்று முன்தினம் மதுரையில் இருந்து துபாய் புறப்பட தனியார் விமானம் ஒன்று புறப்படவிருந்த நேரத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நிறுத்தப்பட்டது. விமானத்தில் ஏறிய பயணிகள் மீண்டும் இறக்கிவிடப்பட்டு விமான நிலைய வளாகத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.
மதியம் 12 மணிக்கு புறப்பட வேண்டிய அந்த தனியார் விமானம், கோளாறு சரிசெய்யப்பட்டு சுமார் 6 மணி நேரம் கழித்து மாலை 6.45 மணிக்கு மதுரையில் இருந்து மீண்டும் துபாய் புறப்பட்டது. இதில் பயணிகள் சிலரின் பொருட்கள் மதுரையிலேயே விட்டுச்செல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று (12.06.2022) மாலை 4.30 மணிக்கு மதுரையில் இருந்து துபாய் புறப்பட இருந்த மற்றொரு விமானம் பயணிகள் Boarding முடித்த நிலையில் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
சென்னையில் இருந்து பொறியாளர்கள் வரவழைக்கப்பட்டு கோளாறு சரி சரிசெய்யும் பணி துவங்கியது. ஆனால் இரவு 9 மணி ஆகியும் கோளாறு சரிசெய்யப்படவில்லை, இதனால் ஆத்திரமடைந்த பயணிகள் விமான சேவை நிறுவனத்துடன் வாக்குவாதலில் ஈடுபட்டனர்.
இறுதியில் சுமார் 5 மணிநேரம் கழித்து அந்த விமானம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது, நேற்று முன்தினமும், நேற்றும் நடந்த இந்த சம்பவம் ஒரே தனியார் விமான சேவை நிறுவனத்தில் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.