இந்தியாவில் இருந்து கடந்த சில ஆண்டுகளாக வெகு சில நகரங்களில் இருந்தே விமானங்கள் நமது அமீரகத்திற்கு இயக்கப்பட்டது. ஆனால் தற்போது உலக அளவில் தொற்று விகிதம் தற்போது குறைந்து வருவதால் சென்னை, திருச்சி, மதுரை உள்ளிட்ட பல நகரங்களில் இருந்து துபாய்க்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் நேற்று மதுரையில் இருந்து துபாய் புறப்பட தயாராக இருந்த தனியார் விமானம் ஒன்றில் பயணிகள் Boarding முடிந்து ஏற்றப்பட்டனர். ஆனால் விமானம் புறப்பட தயாராக இருந்த நேரத்தில் அதில் இருந்த இயந்திர கோளாறு கண்டுபிடிக்கப்பட்டது.
உடனடியாக பயணிகள் விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்டு மீண்டும் விமான நிலையத்திற்குள் அனுப்பப்பட்டனர். அதன் பிறகு அங்கு வரவழைக்கப்பட்ட விமான பொறியாளர்கள் விமானத்தில் உள்ள கோளாறை சரிசெய்ய துவங்கினர்.
இறுதியில் சுமார் 6 மணிநேரம் 45 நிமிடத்திற்கு பிறகு மீண்டும் விமானம் புறப்பட தயாரானது. மதியம் 12 மணிக்கு புறப்பட வேண்டிய விமானம் அன்று மாலை 7 மணிக்கு மதுரையில் இருந்து துபாய் புறப்பட்டது.