UAE Tamil Web

துபாய்: காதலிக்கு பர்த்டே ஃகிப்ட்டாக இளம் ஒட்டகத்தை தந்த நபர் கைது.!

camel

காதலிக்கு பிறந்த நாள் பரிசாக கொடுக்க எவ்வளவோ பொருட்கள் இருந்தும் ஒட்டகத்தை பரிசாக கொடுத்த நபர் ஒருவர் தற்போது அமீரகத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் தனது காதலிக்கு ஒட்டகத்தை பரிசாக கொடுக்க நினைத்தது தவறில்லை. ஆனால் அதற்காக திருட்டு வேலையில் ஈடுபட்டதே அவரை ஜெயில் கம்பிகளுக்கு பின்னால் கொண்டு போய் நிறுத்தியுள்ளது.

- Advertisment -

துபாயில் காதலிக்கு பிறந்தநாள் பரிசாக கொடுக்க பண்ணை ஒன்றில் இருந்து பிறந்து சில மணி நேரமே ஆன ஒரு இளம் ஒட்டகத்தை திருடிய ஒரு நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக அமீரகத்தின் அரபு நாளேடான அல் பயான் செய்தி வெளியிட்டுள்ளது. இளம் ஒட்டகத்தை திருடி காதலிக்கு பரிசளித்த நபரும், அவரது காதலியும் பின்னர் எங்கே திருட்டு சம்பவம் வெளியே தெரிந்து விடுமோ என்ற பயத்தில் அந்த இளம் ஒட்டகத்தை தங்கள் சொந்த பண்ணைக்கு அருகே கண்டெடுத்ததாக புகாரளிக்க இருவரும் முடிவு செய்ததாக பர் துபாய் காவல் நிலைய இயக்குநர் பிரிகேடியர் அப்துல்லா காதிம் தகவல் தெரிவித்துள்ளார்.

பிறந்து சில மணி நேரங்கள் கழித்து காணாமல் போன ஒட்டக குட்டி குறித்து போலீஸ் நிலையத்திற்கு புகார் வந்தது. இதனை அடுத்து சம்பவம் நடந்த இடத்திற்கு காவல்துறை ஒரு குழுவை அனுப்பியது. ஆனால் திருடியவரை காட்டி கொடுக்கும் எந்த ஆதாரத்தையும் அந்த குழுவால் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில் சில நாட்கள் கழித்து ஒரு நபரிடமிருந்து(திருடிய நபர்) காவல்துறையினருக்கு ஒரு தகவல் கிடைத்தது, தனது சொந்த பண்ணைக்கு முன்னால் ஒரு இளம் ஒட்டகத்தை கண்டறிந்துள்ளதாக கூறினார். இதனை அடுத்து அங்கு விரைந்த அதிகாரிகளிடம் ஒட்டகத்தை திருடிய நபர் தனது கதையை அளந்துள்ளார். ஆனால் அவரது பேச்சில் அதிகாரிகளுக்கு நம்பிக்கை ஏற்படவில்லை.

ஏனென்றால் ஒட்டகம் காணாமல் போன பண்ணைக்கும் , கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்பட்ட பண்ணைக்கும் இடையிலான தூரம் 3 கிலோமீட்டர். மேலும் இரு பண்ணைகளுக்கு இடையே பிரதான சாலை ஒன்றும் உள்ளது. புதிதாகப் பிறந்த ஒட்டகம் எப்படி இவளவு தூரத்தையும், பிரதான சாலையையும் கடந்து வந்திருக்க முடியும் என்ற சந்தேகம் வலுவாக எழுந்தது. இதனை அடுத்து தகவல் தெரிவித்த நபரை தீவிரமாக விசாரித்தனர் அதிகாரிகள்.

அப்போது உண்மையை கக்கிய அந்த நபர் புதிதாக பிறந்த ஒட்டகம் அரிய இனத்தைச் சேர்ந்தது மற்றும் மிகவும் விலை உயர்ந்தது என்பதால் அதனை திருடி காதலிக்கு பிறந்தநாள் பரிசாக வழங்கியதாக ஒப்பு கொண்டார். ஒட்டகத்தைத் திருட பண்ணைக்குள் இரவு நேரத்தில் நுழைந்தேன். பின் மாட்டிக்கொள்வோமோ என்ற அச்சத்தில் எனது சொந்த பண்ணைக்கு அருகே ஒட்டக குட்டியை கண்டறிந்ததாக போலி கதையை உருவாக்கினேன் என்று அந்த நபர் கூறியதாக பிரிகேடியர் அப்துல்லா தகவல் தெரிவித்துள்ளார்.

உண்மையை அறிந்த பின் இளம் ஒட்டகத்தை அதன் உண்மையான உரிமையாளரிடம் திருப்பி அனுப்பியதாகவும், ஒட்டகத்தை திருடி போலீசாருக்கு போலி தகவல்களை வழங்கிய குற்றச்சாட்டின் பேரில் திருடிய நபரையும், அவனது காதலியையும் பொது வழக்கு விசாரணைக்கு அனுப்பியதாகவும் பிரிகேடியர் அப்துல்லா தெரிவித்தார்.