UAE Tamil Web

எமிரேட்ஸ் ஐடியை காண்பிக்கச் சொன்ன காவல்துறை அதிகாரி மீது சரமாரி தாக்குதல் – தீர்ப்பை அறிவித்தது நீதிமன்றம்..!

court

அஜ்மான்: காவல்துறை அதிகாரியை தாக்கிய கும்பல் மீதான வழக்கு இன்று அஜ்மான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதில் குற்றம்சாட்டப்பட்ட முதன்மைக் குற்றவாளிக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 3000 திர்ஹம்ஸ் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. தண்டனைக்காலம் முடிவடைந்தவுடன் குற்றவாளிகள் நாடுகடத்தப்படவேண்டும் என நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.

போதைப்பொருள் புரோக்கர்

அஜ்மான் குற்றவியல் விசாரணைப் பிரிவிற்கு ரகசியத் தகவல் ஒன்று கிடைக்கிறது. அதன்படி, தடைசெய்யப்பட்ட போதைப்பொருட்களை ஆன்லைன் மூலமாக ஒரு கும்பல் விற்றுவருவது காவல்துறைக்குத் தெரியவந்திருக்கிறது. இதற்கென தனிப்படை அமைத்து வழக்கை விசாரித்த போலீசார், இதில் மூளையாகச் செயல்பட்ட 43 வயது நபரை கண்டுபிடித்திருக்கிறது.

ஒருநாள் அவரைப் பின்தொடர்ந்து மடக்கிய காவல்துறை, அவரிடம் எமிரேட்ஸ் ஐடி மற்றும் பிற ஆவணங்களை காட்டுமாறு தெரிவித்துள்ளது. அதற்கு மறுப்புத் தெரிவித்த அந்நபர் சிறிது நேரத்தில் காவல்துறை அதிகாரியைத் தாக்கத் துவங்கிவிட்டார். அதன்பின்னர் அவருடைய குழுவைச் சேர்ந்த மேலும் 2 பேரும் காவல்துறை அதிகாரியைத் தாக்கியிருக்கின்றனர்.

மூவரையும் காவல்துறை கைது செய்து, நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தியது. விசாரணையில் தடைசெய்யப்பட்ட போதைப்பொருளை ஆன்லைன் மூலமாக மக்களை நாடி, அவர்களை எங்கே வரச் செய்வது? எப்படி பொருளை விநியோகிப்பது போன்ற வேலைகளை இருவரும் மேற்கொண்டதாக ஒப்புக்கொண்டுள்ளனர்.

குற்றவாளிகளில் இருவருக்கு மூன்று ஆண்டுகளும் ஒருவருக்கு 1 ஆண்டும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தண்டனை முடிந்தவுடன் இவர்கள் மூவரும் நாடுகடத்தப்படவேண்டும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.