UAE Tamil Web

கேள்வி கேட்ட போலீசை அறைந்த நபர் – தண்டனையை வெளியிட்டது நீதிமன்றம்..!

dubai-court

துபாய் காவல்துறை அதிகாரியைத் தாக்கிய எகிப்தைச் சேர்ந்த நபர் மீதான வழக்கில் இன்று துபாய் நீதிமன்றம் தீர்ப்பை வெளியிட்டது. அதன்படி, காவல்துறை அதிகாரியை தாக்கியவர் மற்றும் அவருடைய நண்பர் ஆகிய இருவருக்கும் மூன்று மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் தண்டனைக்காலம் முடிவடைந்தவுடன் இருவரும் நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் எனவும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாஸ்க் எங்கே?

துபாயின் நைஃப் பகுதியில் முகக்கவசம் இல்லாமல் சென்ற 46 வயது எகிப்திய நபரை காவல்துறை அதிகாரி நிறுத்தி கேள்வி கேட்டிருக்கிறார். அடையாள அட்டையை காண்பிக்க மறுத்த அந்நபர், காவல் அதிகாரியை தாக்கியதோடு, மோசமான வார்த்தைகளால் திட்டியிருக்கிறார்.

இதுகுறித்துப் பேசிய 23 வயது காவல்துறை அதிகாரி,” முகக்கவசம் இல்லாமல் வந்துகொண்டிருந்த அவரிடம் அவருடைய அடையாள அட்டையைக் காண்பிக்கும்படிக் கேட்டேன். ஏற்கனவே முகக்கவசம் அணியாததால் தன்னுடைய அடையாள அட்டையை காவல்துறையிடம் சமர்ப்பித்துவிட்டதாகத் தெரிவித்தார். மேலும், அபராதத் தொகையை வாங்கிக்கொள்ளும்படி கூறினார். நாங்கள் அபராதம் வாங்க முடியாது எனத் தெரிவித்தேன். அவர் அங்கிருந்து தப்பிக்க முயன்றார். பின்னர் சக காவல்துறை அதிகாரிகள் அவரை சுற்றிவளைத்துப் பிடித்தனர்” என்றார்.

எகிப்தைச் சேர்ந்த நபர் காவல்துறை அதிகாரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட போது, அவரது நண்பர் ஒருவர் அதனை தனது செல்போனில் வீடியோ எடுத்திருக்கிறார். காவல்துறை அதிகாரிகள் போனை ஒப்படைக்கும்படி கூறியும் அவர் அதனைக் கேட்கவில்லை. ஆகவே இருவரையும் காவல்துறை கைது செய்திருக்கிறது.

dubai-court
0 Shares
Share via
Copy link