UAE Tamil Web

“அது பொண்ணும் இல்ல; போலீசும் இல்ல” – டாக்ஸி டிரைவரிடம் வித்தைகாட்டிய பலே திருடன்..!

சில செய்திகளைப் படிக்கும் போது இப்படியெல்லாம் கூட நடக்குமா? என்று தோன்றுமல்லவா? அப்படியான சங்கதி ஒன்றுதான் கடந்த ஏப்ரல் மாதம் துபாயில் நடைபெற்றுள்ளது.

கொமொராஸ் ஐஸ்லேன்ட் பகுதியில் தனது டாக்ஸியை ஓட்டிக்கொண்டிருந்த பாகிஸ்தானைச் சேர்ந்தவர், பெண் ஒருவர் கைகாட்டுவதை பார்த்தவுடன் டாக்ஸியை நிறுத்தியிருக்கிறார். அருகில் சென்றதும் பெண் காவல்துறையில் பணிபுரிபவருக்கான சீருடையை அணிந்திருப்பது தெளிவாகியிருக்கிறது.

திடீரென போலீசைப் பார்த்ததும் பயத்தில் டிரைவருக்கு வேர்த்துக்கொட்ட, அந்த பெண்ணும் காருக்குள் நுழைந்திருக்கிறார். துபாய் காவல்துறையின் லோகோ ஒட்டிய பவர் பேங்கை டிரைவரிடம் அந்தப் பெண் காட்டியிருக்கிறார்.

எதற்கு வம்பு என்று அமைதியாக டிரைவர் காரை ஓட்ட, கொஞ்ச நேரத்தில் அந்த விபரீதம் நடந்திருக்கிறது. “பையில் எவ்வளவு பணம் வச்சிருக்க” அந்தப் பெண் ஆண்குரலில் பேச, விக்கித்துப் போய் திரும்பிப் பார்த்திருக்கிறார் டிரைவர்.

வந்தது பெண்தானா? என சந்தேகம் எழுந்தவுடனேயே டிரைவரின் பொடனியில் பளார் என அடித்திருக்கிறார் அந்தப் பெண். டிரைவரின் பர்ஸை பறித்துக்கொண்ட பெண், ஓட்டமெடுக்கையில் மாஸ்க்கை கழட்டியிருக்கிறார். அப்போதுதான் தெரிந்திருக்கிறது அது அவள் இல்லை அவன் என்று.

ஆம். பொடனியில் போட்டு ஆட்டையைப் போட்டது ஆண் எனத் தெரிந்ததும் காவல்துறையில் டிரைவர் தெரிவித்திருக்கிறார். தனது பர்சில் 6,700 திர்ஹம்ஸ் வைத்திருந்ததாவும் கொள்ளையன் அதை எடுத்துச் சென்றதாகவும் டிரைவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

வழக்கை விசாரித்த காவல்துறை, நூதன கொள்ளையனை உடனடியாக கைது செய்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல் அவர் ஏற்கனவே குற்றப்பின்னணி உடையவர் என்பதும் தெரியவந்திருக்கிறது.

வழிப்பறி, காவல்துறை அதிகாரி போல நடித்தது போன்ற குற்றங்களின் அடிப்படையில் அவர்மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. விசாரணையின்போது,” பெண் வேடமிட்டால் எளிதில் வண்டியை நிறுத்துவார்கள்; சுலபமாக கொள்ளையடிக்கலாம்” என மிஸ்டர் திருடர் தெரிவித்திருக்கிறார்.

இந்த வழக்கின் அடுத்த விசாரணை ஜூலை 4 ஆம் தேதி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap