UAE Tamil Web

1 வருஷமா சம்பளம் கொடுக்கல.. அதுதான் கொளுத்திட்டேன் – வேலைபார்த்த நிறுவனத்தை சாம்பலாக்கிய தொழிலாளி..!

match-fire-flame-matchstick-wallpaper-preview

ஒருவருடமாக சம்பளம் கொடுக்காத கோபத்தில் வேலை பார்த்த நிறுவனத்தை கொளுத்திய நபர் மீதான வழக்கில் இன்று துபாய் நீதிமன்றம் தீர்ப்பினை வழங்கியது. அதில் குற்றவாளிக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது. மேலும் தண்டனைக்காலம் முடிவடைந்தவுடன் அவர் நாடுகடத்தப்படவேண்டும் என தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

என்ன நடந்தது?

துபாயின் நைஃப் பகுதியில் இருக்கிறது அந்தத் துணிக்கடை. இங்கு விற்பனையாளராக பணிபுரிந்துவரும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 27 வயது இளைஞர் தன்னுடைய முதலாளியை பழிவாங்கும் நோக்கில் கடைக்குத் தீ வைத்துள்ளார். இதன் காரணமாக 10 லட்சம் திர்ஹம்ஸ் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின.

பாகிஸ்தானைச் சேர்ந்த முதலாளி கடந்த ஒரு வருடமாக தனக்கு ஊதியம் கொடுக்காததால் இவ்வாறு செய்ததாக இளைஞர் காவல்துறையிடம் தெரிவித்திருக்கிறார்.

கடந்தாண்டு டிசம்பர் மாதம் ஓர் இரவில் கடைக்குச் சென்ற இளைஞர், பூட்டை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றிருக்கிறார். தனக்குச் சேரவேண்டிய பணத்தினைப் பெறும் நோக்கில் கல்லாவை திறந்து பார்த்திருக்கிறார். அங்கு ஒன்றுமில்லை எனத் தெரிந்ததும் ஆத்திரமடைந்த இளைஞர் லைட்டர் இருப்பதைக் கண்டுபிடித்திருக்கிறார்.

கோபத்தில் இருந்த இளைஞர் அருகில் இருந்த பொருட்களை உடைத்து சேதப்படுத்தியிருக்கிறார். அப்படியும் ஆத்திரம் தணியாததால் கடையை கொளுத்திவிட்டார்.

சிசிடிவி கேமரா மூலமாக, இளைஞர் கடைக்குள் செல்ல முயற்சிப்பதை அறிந்த முதலாளி உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்திருக்கிறார். காவல்துறை வந்து சேர்வதற்குள் கடை முழுவதுமாக எரிந்து தணிந்திருந்தது.

பொது வழக்குத்துறை அறிக்கையின் அடிப்படையில் இளைஞர் ஏற்படுத்திய சேதத்தின் மொத்த மதிப்பு 985,000 திர்ஹம்ஸ் எனக் கணக்கிடப்பட்டிருக்கிறது.