UAE Tamil Web

நாளைக்கு பரீட்சை; படிக்க உதவி செய்யமுடியுமா? தயக்கத்துடன் கேட்ட சிறுமி – காவல்நிலையத்தினைப் பயன்படுத்திக்கொள்ள அனுமதித்த அதிகாரிக்கு குவியும் பாராட்டுக்கள்..!

Stock-Sharjah-Police

ஷார்ஜா டிவி/ரேடியோ நேரலையில் ஏமிராட்டி ஒருவர் போன் செய்து “வாசித் காவல்நிலைய அதிகாரிக்கு என்னுடைய நன்றி. அவர் காட்டிய பரிவினால் எனது மகள் இன்று தேர்வினை எழுத முடிந்தது. அவருக்கு நன்றி” எனத் தெரிவித்திருக்கிறார்.

ரமலான் மாதத்தின் ஒரு நாள் இரவு ஹசன் என்னும் நபர் தனது வீட்டிற்குத் திரும்பியுள்ளார். அடுத்தநாள் 11 ஆம் வகுப்புப் படிக்கும் அவரது மகளுக்கு மொழிப் பாடத்திற்கான தேர்வு இருந்தது. ஆனால் அதற்குப் படிப்பதற்கான அனைத்து விடைகளும் சிறுமியின் மொபைல் போனில் இருந்திருக்கின்றன. பிரிண்ட் எடுத்துக் கொடுக்கும்படி மகள் கேட்கவே அந்த நள்ளிரவில் காரில் மகளையும் ஏற்றிக்கொண்டு வெளியே வந்திருக்கிறார் ஹசன்.

பெட்ரோல் பாங்க் முதற்கொண்டு அனைத்து இடங்களிலும் உதவிகேட்டும் அனைவரும் மறுத்துவிட்டனர். தேர்வை நினைத்து சிறுமி அழத் துவங்கவே, கலங்கிப்போன தந்தை அருகில் இருந்த வாசித் காவல் நிலையத்திற்குள் சென்றிருக்கிறார்.

இசா அல் ஹம்மாடி என்னும் காவலர் ஹசனை வரவேற்று என்ன நடந்தது எனக் கேட்டிருக்கிறார். அவரும் சிக்கலைத் தெரிவிக்க, மகளை அழைத்துவருமாறு ஹம்மாடி கூறியிருக்கிறார். காரில் அழுதுகொண்டிருந்த மகளை காவல் நிலையத்திற்கு உள்ளே அழைத்துச் சென்றிருக்கிறார் ஹசன். இருவரையும் அமரச்செய்து தேநீர் மற்றும் பேரீச்சம்பழங்களை ஹம்மாடி அளித்திருக்கிறார்.

தயங்கியபடியே தனக்கு பிரிண்ட் எடுத்துக்கொடுக்க உதவமுடியுமா எனச் சிறுமி கேட்டிருக்கிறார். காவல்நிலையத்தில் உள்ள கணினிகளை கைகாட்டி தேவையான அளவு பிரிண்ட் எடுத்துக்கொள்ளும்படி ஹம்மாடி தெரிவித்திருக்கிறார். ஒருவழியாக சிக்கல் தீர்ந்தது. ஹம்மாடிக்கு நன்றி சொல்லிவிட்டு அங்கிருந்து சென்ற சிறுமி தனது தேர்வையும் சரியான நேரத்தில் சிறப்பாக எழுதி முடித்திருக்கிறார்.

தக்க சமயத்தில் உதவிபுரிந்த ஹம்மாடிக்கு ஹசன் டிவி நேரலையில் வாழ்த்து தெரிவித்ததும் பலரும் ஹம்மாடிக்கு வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.