UAE Tamil Web

அமீரகம்: மனைவி மற்றும் 2 மகள்களை சுத்தியலால் அடித்துக்கொன்ற தந்தை..!

-hammerx-

அஜ்மானில் தனது மனைவி மற்றும் 2 மகள்களை கொடூரமாகக் கொன்ற நபரின் மீதான வழக்கை ஷரியா குற்றவியல் நீதிமன்றத்திற்கு பரிந்துரை செய்துள்ளது அஜ்மான் பொதுவழக்குத்துறை.

32 வயதான மனைவி மற்றும் இரு மகள்களை (16 மற்றும் 13 வயது) சுத்தியலால் தாக்கியும் துணியைக்கொண்டு அவர்களை மூச்சுத்திணறச் செய்துவிட்டு சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றிருக்கிறார் குற்றவாளி. இருப்பினும் தனது 7 வயதான மகனை அபுதாபியில் உள்ள அவனது பாட்டி வீட்டில் விட்டுவிட்டு வெளிநாட்டிற்குத் தப்பிச் சென்றிருக்கிறார்.

தனது மகள் மற்றும் பேத்திகளின் போனுக்கு தொடர்ந்து கால் செய்த பாட்டி, பயத்தின் காரணமாக காவல்துறைக்குத் தகவல் கொடுத்திருக்கிறார். சம்பவ இடத்திற்கு விரைந்துசென்ற காவல்துறை மூன்று சடலங்களையும் மீட்டிருக்கிறது.

அஜ்மான் பொதுவழக்குத்துறை நடத்திய விசாரணையில், கையில் சூட்கேசுடன் தனது வீட்டிலிருந்து அவசரமாக வெளியேறி காரில் செல்லும் குற்றவாளியின் சிசிடிவி பதிவு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்த கொடூர கொலை வழக்கில் வெளிநாட்டிற்குத் தப்பிச்சென்ற குற்றவாளியை கைதுசெய்ய இண்டர்போல் – உடன் இணைந்து அஜ்மான் காவல்துறை பணியாற்றிவருகிறது.