UAE Tamil Web

MBZ-Sat என்ற பெயரில் புதிய செயற்கைக்கோளை உருவாக்க உள்ள அமீரகம்.!

MBZ

புதிய செயற்கைக்கோள் ஒன்றை அமீரகம் உருவாக்கப் போவதாக நாட்டின் துணை தலைவரும், பிரதமரும், துபாயின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அறிவித்துள்ளார்.

- Advertisment -

அபுதாபியின் பட்டத்து இளவரசரும், அமீரக ஆயுதப்படைகளின் துணை உச்ச தளபதியுமான ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் அவர்களின் பெயரில் புதிய செயற்கைக்கோள் உருவாக உள்ளது. MBZ-Sat என்று அதற்கு பெயரிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் தகவல் தெரிவித்துள்ள ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம், “பிராந்தியத்தில் சமீபத்திய நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி 100 சதவீதம் எமிராட்டிகள் அடங்கிய குழு புதிய செயற்கைக்கோளை உருவாக்க உள்ளது. இந்த செயற்கைக்கோள் சிவிலியன் மற்றும் வணிக நோக்கங்களுக்காக(civilian and commercial) பயன்படுத்தப்படும்” என்று கூறியுள்ளார்.

மேலும் ‘அமீரகத்திலேயே உருவாக்கப்பட்ட முதல் செயற்கைகோளுக்கு “கலீஃபா சாட்”(Khalifa Sat) என்று பெயரிடப்பட்டது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள புதிய செயற்கைகோள் எனது சகோதரர் முகமது பின் சயீத்தின் பெயரிடப்படும்(MBZ-Sat). அல்லாஹ் அவரைப் பாதுகாக்கட்டும் ”என்று ஷேக் முகமது ட்வீட் செய்துள்ளார்.

100% அமீரகத்திலேயே வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட முதல் செயற்கைக்கோள் Khalifa Sat ஆகும். உலகின் மிக மேம்பட்ட ரிமோட் சென்சிங் கண்காணிப்பு செயற்கைக்கோள்களில் ஒன்றான இது, பூமியின் குறைந்த சுற்றுப்பாதையில் கடந்த அக்டோபர் 2018-ல் ஏவப்பட்டது. இது துபாயில் உள்ள முகமது பின் ரஷீத் விண்வெளி மையத்திற்கு பூமியின் உயர்தர, விரிவான படங்களை அனுப்பி வருகிறது.

அமீரகத்தின் விண்வெளி சாதனைகள்..

அமீரகம் தனது முதல் விண்வெளி வீரரை செப்டம்பர் 25, 2019 அன்று விண்வெளிக்கு அனுப்பியது. எமிராட்டி விண்வெளி வீரர் ஹஸ்ஸா அல் மன்சூரி, ரஷ்ய ஸ்பேஸ்கிராஃப்ட்டான Soyuz MS-15 -ல் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றார்.

2021-ம் ஆண்டில் செவ்வாய் கிரகத்தை அடைவதற்கும், 2117-க்குள் முதல் குடியேற்றத்தை உருவாக்குவதற்கும் நாட்டின் லட்சிய, விண்வெளி திட்டத்தின் ஒரு பகுதியாக அமீரகம் தனது தேசிய விண்வெளி திட்டத்தை அறிமுகப்படுத்தியது. செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய புறப்பட்டுள்ள அமீரகத்தின் ஹோப் விண்கலம் தற்போது வரை சுமார் 200 மில்லியன் கிலோமீட்டருக்கு மேல் பயணித்துள்ளது.