UAE Tamil Web

தனது உயிரைப் பணயம் வைத்து 878 பேரைக் காப்பாற்றிய அமீரக வாழ் இந்தியர்..!

kerala man

அமீரகத்தில் கொரோனா அதன் உச்சத்தைத் தொட்ட நிலையில் அமீரக வாழ் மக்கள் பலரும் வீட்டைவிட்டு வெளியே செல்ல முடியாமல் தங்களது வீடுகளிலேயே முடங்கிக் கிடந்தனர். நாளுக்குநாள் தொற்று அதிகரிக்கத் தொடங்க மருத்துவ உதவிபெறக்கூட வெளியே வரமுடியாமல் தவித்த மக்களுக்காக அமீரக வாழ் இந்தியர் ஒருவர் தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு உதவி செய்ய களத்தில் இறங்கியிருக்கிறார். இதுவரையில் 878 கொரோனா நோயாளிகளின் உயிரைக் காப்பாற்றியிருக்கும் ஷைஜு டேனியல் (Shyju Daniel) கேரள மாநிலம் மேவேலிக்கரையைச் சேர்ந்தவர்.

- Advertisment -

துபாயில் நிறுவனமொன்றில் விற்பனை அதிகாரியாகப் பணிபுரிந்துவந்த டேனியல், ஹோர் அல் அன்ஸ் (Hor Al Anz) பகுதியில் வசித்துவந்தார். இன்காஸ் தன்னார்வலர்கள் குழு மற்றும் அனைத்து கேரள முன்னாள் மாணவர் அமைப்பின் செயல் அமைப்பு (AKCAF) ஆகியவற்றுடன் இணைந்து கொரோனா காலத்தில் உதவி நடவடிக்கைகளை முன்னெடுத்திருக்கிறார் டேனியல்.

குழுவில் அவருக்கு வழங்கப்பட்ட பணி, கொரோனா அறிகுறியுடன் உள்ளவர்களின் விபரங்களை சேகரித்து, தொகுத்து பாதிக்கப்பட்டவர்களை ஆம்புலன்ஸ் மூலம் தனிமைப்படுத்தலுக்கான மையங்களுக்கு அழைத்துச் செல்வதுதான். ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் 878 பேரை தனிமைப்படுத்தலுக்கான மையங்களுக்கு அழைத்துச்சென்று அவர்கள் பூரண குணமடைய உதவியிருக்கிறார் டேனியல்.

“கொரோனா அறிகுறியுடன் அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் தவித்த மக்களிடம் இருந்து எனக்கு அழைப்புவரும். நாளாக நாளாக இந்த அழைப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகமானது. நான் அவர்களின் பெயர்கள், போன் நம்பர், ஐடி எண் மற்றும் இருப்பிடத்தை பெற்றுக்கொள்வேன். பின்னர், துபாய் சுகாதாரத்துறை மற்றும் அஸ்தர் டிம் சுகாதார நிறுவனத்தின் (Aster DM Healthcare) ஆம்புலன்ஸ்களை அழைத்து இத்தகவல்களைப் பகிர்வேன்” என டேனியல் தெரிவித்தார்.

தன்னிடம் இருந்த தரவுகளின் அடிப்படையில் இதுவரையில் 878 பேரை டேனியல் காப்பாற்றியிருக்கிறார். இதுகுறித்து அவர்,” மிதமான மற்றும் தீவிர அறிகுறியுடன் இருந்தவர்களை தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அழைத்துச் சென்றிருக்கிறோம். அதில் கோவாவைச் சேர்ந்த ஒருவர் மட்டும் நோய்த் தொற்றின் காரணமாக இறந்துபோனார். நைஃப் பகுதியைச் சேர்ந்தவர் அவர்” என டேனியல் குறிப்பிட்டார்.

நோயாளிகளிடம் இருந்து அழைப்பு வராத வேளைகளில் இன்காஸ் மற்றும் AKCAF உடன் இணைந்து உணவுப் பொருட்களை நைஃப் பகுதியில் உள்ள கஷ்டப்படுவோருக்கு விநியோகம் செய்துவந்திருக்கிறார் டேனியல். ஆம்புலன்ஸ் கிடைக்காதபோதும், நோயாளிகளின் இருப்பிடத்தை அடைய முடியாத சூழ்நிலையின்போதும் தங்களுக்கு துபாய் காவல்துறை வேண்டிய உதவிகளை வழங்கியதாகவும் அதற்காக நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்வதாகவும் டேனியல் தெரிவித்தார்.

மணமாகதோர் குடியிருப்புகளில் கொரோனா பரிசோதனைகளில் பாசிட்டிவ் என வந்தவர்கள், அறையில் உள்ள மற்றவர்களுக்கு தோற்று ஏற்படாதவண்ணம் தனிமைப்படுத்தலுக்கான விடுதிகளுக்குச் செல்வதை நான் பார்த்திருக்கிறேன் – டேனியல்.

தற்போது அமீரகத்திலிருந்து இந்தியா திரும்ப முடியாமல் தவிக்கும் இந்தியர்களுக்கு உதவி செய்துவரும் டேனியலுக்கு சில வாரங்களுக்கு முன்னர் ஆஞ்சியோ பிளாஸ்டி செய்யப்பட்டிருக்கிறது. அவரது இதயத்தில் ஏற்பட்ட இரண்டு அடைப்புகளை இந்த சிகிச்சையின் மூலம் அகற்றியிருக்கிறார்கள் மருத்துவர்கள்.

அதிர்ஷ்டவசமாக தனக்கு கொரோனா நோய்த்தொற்று ஏற்படவில்லை எனும் டேனியலைப் பற்றி சமூக ஆர்வலரும் மூத்த வழக்கறிஞருமான ஹாஷிக் பேசுகையில்,” பல நாட்கள் அவர் தூங்காமல் சேவையாற்றினார். அஸ்தர் சுகாதார அதிகாரிகள் மற்றும் இன்காஸ் ஆகியவற்றின் முன்னெடுப்பு மூலம் கொரோனா நோயாளிகளுடன் அவர் பணியாற்ற வேண்டியிருந்தது. சில இரவுகளில் விடியும் வரை அவருக்கு அழைப்புகள் வந்தவண்ணம் இருக்கும்” என்றார்.