அண்மையில் வெளியான ஒரு அறிக்கையின்படி, துபாயில் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றும் தொழிலாளர்கள் உலக அளவில் அதிகம் சம்பாதிக்கிறவர்களில் மூன்றாவது இடத்தில் உள்ளனர். கடந்த புதன்கிழமை அன்று Mercer என்ற ஆலோசனை நிறுவனம் இந்த ஆய்வு முடிவை வெளியிட்டுள்ளது.
அறிக்கையின்படி, லண்டன், ஆம்ஸ்டர்டாம் மற்றும் பெர்லின் போன்ற பிற முக்கிய தொழில்நுட்ப மையங்களில் உள்ள சக ஊழியர்களை விட துபாயில் உள்ள மென்பொருள் பொறியாளர்கள் (குறைந்தது மூன்று வருட அனுபவமுள்ளவர்கள்) 30% அதிகமாக சம்பாதிக்கிறார்கள் என்று கூறுகிறது.
மேலும் அந்த ஆய்வின்படி, கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள Silicon Valley மற்றும் நியூயார்க்கில் உள்ள தொழில்நுட்ப பணியாளர்கள் துபாயில் உள்ள சக ஊழியர்களை விட 35% மற்றும் 22% அதிகமாக சம்பாதிக்கிறார்கள்.
“உலகளாவிய வணிக மையமாக விளங்கும் துபாயின் வருமான வரி இல்லாத சூழல், உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு, பாதுகாப்பு மற்றும் உயர்தர வாழ்க்கைத் தரம் ஆகியவை அமீரக திறமையாளர்களுக்கான மிகவும் கவர்ச்சிகரமான சந்தையாக மாற்றுகின்றன” என்று மெர்சர் மத்திய கிழக்கின் தொழிலாளர் இயக்கத் தலைவர் விளாடிமிர் வர்ஜோவ்ஸ்கி தெரிவித்தார்.
“டிஜிட்டல் பொருளாதாரத்தின் உலகளாவிய மூலதனமாக இருக்கும் நாட்டின் உந்துதலைக் கருத்தில் கொண்டு, குறிப்பாக தொழில்நுட்ப திறமைகளுக்கான தேவை அமீரகத்தில் தொடர்ந்து வளரும்” என்றும் அவர் கூறினார்.