சூரிய ஒளியில் நேரடியாக பணிபுரியும் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் பொருட்டு கடந்த ஜூன் 15 ஆம் தேதியிலிருந்து இந்த வருடத்திற்கான மதிய ஓய்வு இடைவேளைத் திட்டத்தை அறிவித்தது மனிதவள மேம்பாடு மற்றும் எமிராட்டிசேஷன் அமைச்சகம் (MoHRE). இந்நிலையில், பிற்பகல் 12.30 முதல் 3 மணிவரையிலும் தொழிலாளர்களுக்கு ஓய்வு அளிக்கும் இத்திட்டம் நாளையோடு (செப்டம்பர் 15) நிறைவுபெறுவதாக அமைச்சகம் அறிவித்திருக்கிறது.
வெயிலில் பணிபுரியும் தொழிலாளர்கள் அதிக வெப்பநிலையினால் சோர்வடையாமல் இருப்பதற்காகவும், ஹீட் ஸ்ட்ரோக் வராமல் அவர்களைக் காக்கும் பொருட்டும் 15 வருடங்களுக்கு முன்னர் இந்த மதிய ஓய்வுத் திட்டத்தை அமல்படுத்தியது அமீரக அரசு.
தொழில்நுட்ப காரணங்களினால் ஒத்திவைக்க முடியாத சாலை போடுதல், கான்கிரீட் போடுதல், நீர், பெட்ரோல், கழிவுக் குழாய்களில் ஏற்பட்ட பாதிப்புகளை சீர்படுத்துதல், பழுதடைந்த மின்சார இணைப்புகளை பழுதுபார்த்தல் ஆகிய வேலைகளை மேற்கொள்ளும் நிறுவனங்களுக்கு மட்டும் இந்த திட்டத்தில் விலக்கு அளிக்கப்படுகிறது.
போக்குவரத்தை சீர்படுத்துதல், மின்சார, நீர் மற்றும் தகவல் தொடர்புத் துறையில் ஏற்பட்ட தடங்கலை சரிசெய்ய அரசிடம் உரிமம் பெற்றிருக்கும் நிறுவனங்களுக்கும் இந்த ஓய்வு திட்டம் பொருந்தாது.
இந்நிறுவனங்கள் தங்களது பணியாளர்களுக்கு தண்ணீர், தாகசாந்தி ஏற்படுத்தும் உப்பு, எழுமிச்சை சாறு ஆகியவற்றை வழங்கிட வேண்டும். பணிபுரியும் இடங்களில் கண்டிப்பாக முதலுதவிப் பெட்டி இருத்தல் வேண்டும். கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் கவனமான முறையில் பின்பற்றப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இவ்விதிமுறைகளை மீறும் நிறுவனங்களுக்கு ஒரு பணியாளருக்கு தலா 5000 திர்ஹம்ஸ் அபராதம் என்ற வீதத்திலும் அல்லது அதிகமான பணியாளர்கள் இந்த ஓய்வுக் காலத்தில் ஈடுபடுத்தப்பட்டிருந்தால் அதிகபட்சமாக 50,000 திர்ஹம்ஸ் வரையில் அபராதம் விதிக்கப்படும்.
அபராதம் செலுத்தும் வரையிலும் விதிமுறையை மீறிய நிறுவனத்தின் ஆவணங்கள் அனைத்தும் அரசுத் தரப்பில் கிடப்பில் போடப்படும் அல்லது அந்நிறுவனம் செய்த விதிமீறலைப் பொருத்து MOHRE அமைச்சகத்தினால் வரையறுக்கப்பட்டிருக்கும் நிறுவனங்களின் பட்டியலில் விதிமீறலில் ஈடுபட்ட நிறுவனம் தர வரிசையில் பின்னுக்குத்தள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.