ஏமன் நாட்டின் ஹவுதி கிளர்ச்சிப் படைகளால் அபுதாபி மீது தாக்குதல் நடத்தப்பட்டபோது இரண்டு ஏவுகணைகளை தடுத்து நிறுத்தியதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அமீரக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது “ஹவுதி கிளர்ச்சிப்படை அபுதாபி மீது நடந்தப்பட்ட தாக்குதலின்போது அனுப்பிய இரண்டு ஏவுகணை குண்டுகள் தடுத்து நிறுத்தப்பட்டது. தடுக்கப்பட்ட அந்த ஏவுகணைகளின் குண்டுகள் அபுதாபி சுற்றுப்பகுதியில் செயலிழந்து விழுந்ததால் உயிரிழப்பு ஏற்படவில்லை. நாட்டைப் பாதுகாக்க அனைத்துவித அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள உறுதியாக உள்ளோம். தாக்குதல்களை தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்” என்று பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது.
முன்னதாக அபுதாபி விமான நிலையம், அபுதாபியின் முஷாபா நகரில் உள்ள அட்னாக் எண்ணெய் நிறுவனத்தை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கடந்த 17 ஆம் தேதி டிரோன் தாக்குதல் நடத்தினர். இதில், எண்ணெய் நிறுவனத்தில் பணியாற்றி வந்த 2 இந்தியர்கள், 1 பாகிஸ்தான் நாட்டவர் என 3 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் அமீரகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அபுதாபியில் நடத்தப்பட்ட டிரோன் தாக்குதலுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.