துபாயில் புதிதாக திறக்கப்பட்ட ‘மியூசியம் ஆப் தி ஃபியூச்சர்’ அருங்காட்சியகத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.
இந்த மியூசியம் ஆப் தி ஃபியூச்சர் அருங்காட்சியகத்தை அமீரகத்தின் துணை பிரதமரும், துபாய் ஆட்சியாளர் ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம், துபாயின் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷித் அல் மக்தூம் மற்றும் ஷேக் மக்தூம் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் ஆகியோர் கடந்த மாதம் 22ஆம் தேதி பிரம்மாண்ட முறையில் திறந்து வைத்தனர்.
அமீரகம் சென்றுள்ள ஸ்டாலின் டிவிட்டரில் தெரிவித்துள்ளதாவது, துபாய் மற்றும் அபுதாபி பயணம், பல்வேறு அனுபவங்களை தந்து கொண்டு இருக்கிறது. தமிழக வளர்ச்சி பாதைக்கான நம்பிக்கையை அளித்துவரும் இந்த பயணம், அறிவியல் பார்வையிலும், புதுமையை அள்ளித் தந்து உள்ளது. பழங்காலத்தை நினைவூட்டுவது மட்டுமே, அருங்காட்சியங்களின் பணி அல்ல. புதுமையையும், எதிர்காலத்தையும் நோக்கி நம்மை விரைவுப்படுத்த வேண்டும் என்பதை, ‘மியூசியம் ஆப் பியூச்சர்’ அருங்காட்சியகம் காட்டியது. போலியான பழம் பெருமைகளை பேசி, மூடதனத்திற்குள் புகுந்து கொள்ளாமல், அறிவியல் வழியில் புதுமையை நாடும், இது போன்ற அருங்காட்சியங்கள் காலத்தின் தேவை. இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.
இந்த ‘மியூசியம் ஆப் தி ஃபியூச்சர்’ அருங்காட்சியகம் 7 அடுக்கு மாடி, தூண்கள் இல்லாத அமைப்பு என வித்தியாசமான கோணத்தில் அசத்துகிறது. மொத்தம் 30,000 சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகத்திற்கு செல்பவர்கள் 2071ஆம் ஆண்டுக்கு பயணிப்பது போன்ற அனுபவத்தை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.