UAE Tamil Web

முகமது நபி (ஸல்) புகைப்பட சர்ச்சை – பிரான்ஸ் அதிபரிடம் தொலைபேசி வாயிலாகப் பேசிய அல் நஹ்யான்..!

Mohamed bin Zayed

அபுதாபியின் பட்டத்து இளவரசரும் அமீரக ஆயுதப்படையின் துணைத் தலைமைத் தளபதியுமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் (Sheikh Mohamed bin Zayed Al Nahyan) பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ராணுடன் தொலைபேசி வாயிலாகப் பேசியதாக Wam செய்தி நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

- Advertisment -

இருநாட்டு உறவுகள் பற்றியும் பிராந்திய மற்றும் சர்வதேச அளவில் உலகம் சந்தித்துவரும் பிரச்சினைகள் குறித்தும் இருநாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சமீபத்தில் பிரான்சில் நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலுக்கு, கண்டனம் தெரிவித்த அல் நஹ்யான், தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதாகவும், காயமுற்றோர் விரைந்து நலம்பெற வாழ்த்துவதாகவும் தெரிவித்தார்.

இம்மாதிரியான தாக்குதல்கள் அமைதி, சகோதரத்துவம், சகிப்புத்தன்மை மற்றும் மனிதநேயத்தை அடிப்படையாகக்கொண்ட அனைத்து மதங்களுக்கும் எதிரானவை என அல் நஹ்யான் குறிப்பிட்டார். மேலும், வெறுப்புவாத பேச்சுகள் தவிர்க்கப்பட வேண்டும்; அவை பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்களின் நம்பிக்கைகளைப் பாதிக்கும் என அல் நஹ்யான் தெரிவித்தார். இம்மாதிரியான பேச்சுகள் அடிப்படைவாதிகளையே மேலும் ஊக்குவிக்கும் ஆபத்தைக் கொண்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

“தீவிரவாதம் மற்றும் வன்முறை போன்ற குற்றச் செயல்களை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது. உலக முஸ்லீம்கள் அனைவரின் புனிதராகப் போற்றப்படுகிற முகமது நபிகளின் பெயரை வன்முறைக்கும் அரசியல்படுத்தவும் உபயோகிக்கக் கூடாது. பிரான்ஸ் – அரபு உலக மக்களிடையே இருநாடுகளின் கலாச்சார, வரலாற்று நாகரீகங்கள் குறித்த ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைகள் ஊக்குவிக்கப்படவேண்டும்” என அல் நஹ்யான் தெரிவித்தார்.

பிரான்ஸின் பன்முகத்தன்மை வாய்ந்த கலாச்சாரத்தையும், முஸ்லீம் குடிமக்களின் உரிமைகளுக்கும் நம்பிக்கைகளுக்கும் கலாச்சாரத்திற்கும் இணக்கமாக இருக்கும் பிரெஞ்சு சட்ட மற்றும் நிறுவனங்களுக்கு அல் நஹ்யான் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.

அமீரகம் ஓர் அரபு மற்றும் முஸ்லீம் நாடாக இருந்தாலும் சக வாழ்விற்கும் சகிப்புத்தன்மைக்கும் உலகளாவிய சமூக மக்களின் ஒத்துழைப்பிற்குமான நாடாக இருப்பதாக அல் நஹ்யான் பெருமையுடன் குறிப்பிட்டார்.

மத்திய கிழக்கு மற்றும் கிழக்கு மத்திய தரைக்கடல் பிராந்தியங்களில் வளர்ச்சியை முன்னெடுப்பது பற்றியும் இரு தலைவர்களும் கலந்துரையாடினர். அதேபோல, பிராந்திய பாதுகாப்பு, நிலைத்தன்மை மற்றும் நட்பு நாடுகளின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடாதது போன்ற விஷயங்கள் குறித்தும் பேசப்பட்டன.

பிராந்திய மோதல்களைக் கட்டுப்படுத்தும் அரசியல் நிலைப்பாடுகளை முன்னெடுக்கும் திட்டங்களுக்கு அல்லது நடவடிக்கைகளுக்கு இரு நாட்டுத் தலைவர்களும் ஒப்புதல் அளித்தனர்.

இருநாடுகளிலும் மற்றும் உலகளவில் கொரோனாவைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட முயற்சிகள் குறித்தும், கொரோனாவின் விளைவுகளையும் தாக்கத்தையும் கட்டுப்படுத்தத் தேவையான சர்வதேச ஒத்துழைப்பின் அவசியம் குறித்தும் அல் நஹ்யான் – மேக்ரான் தொலைபேசி வாயிலாக தங்களது கருத்துக்களை பரிமாறிக்கொண்டனர்.