UAE Tamil Web

அமீரகத்தில் இனி அதிகமாக மழை பொழியும்: மிரள வைக்கும் ஆய்வைத் தொடங்கிய அரசு..!

rain uae

அமீரகத்தில் வருடாந்திர மழைப்பொழிவை அதிகரிக்கும் விதமாக புதிய திட்டமொன்றை தேசிய வானிலை ஆய்வுமையம் (NCM) அறிவித்துள்ளது.

- Advertisment -

அமீரகத்தில் மழைப்பொழிவை அதிகரிக்கும் ஆய்வுத் திட்டத்தின் (UAEREP) மூலமாக மழை மேகங்களிடையே மின்னூட்டத்தை செலுத்தி, மழையை உருவாக்கலாம் என நம்பப்படுகிறது.

ஐக்கிய ராஜ்யத்தில் உள்ள ரீடிங் பல்கலைக்கழகத்தில் வளிமண்டல இயற்பியல் துறைப் பேராசிரியர் கிளிஸ் ஹாரிசன் இத்திட்டத்திற்கு தலைமை வகிக்கிறார். மேலும் இந்த திட்டத்திற்கு NCM, UAEREP ஐச் சேர்ந்த நிபுணர்கள், உள்ளூர் மற்றும் சர்வதேச ஆய்வுக் குழுக்கள், ரீடிங் மற்றும் யூனிவெர்சிட்டி ஆஃப் பாத் ஆகியவையும் பங்களிப்புகளை அளிக்க இருக்கின்றன.

செயற்கை மழை

செயற்கை மழையைப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால் முதலில் நாம் மழை பொழிவதைப் புரிந்துகொள்ள வேண்டும். நீரானது ஆவியாகி மேலே சென்று மேகமாகிறது. இப்படி நீர்த்துளிகள் காற்றுடன் இணைந்து மேகமாக பயணித்துக்கொண்டிருக்கும். இந்த சிறிய நீர்க்குமிழிகள் ஒன்றினையும்போது எடை கூடுவதால் அவை மழையாகப் பொழிகின்றன.

இங்குதான் அமீரகத்தின் காலநிலை தனது வேலையைக்காட்டுகிறது. அதீத வெப்பம் காரணமாக நீர்க்குமிழிகள் ஒன்றிணைய வாய்ப்பு கிடைக்காமல் போவது தான் சிக்கல். இதனை மேற்கொள்ள பனிமூட்டம், அல்லது தூசுக்களின் தேவை ஏற்படுகிறது. அப்போதுமட்டுமே நீர்க்குமிழிகளை ஒன்றிணைக்கும் வாய்ப்பு அதிகம்.

முன்பு சில்வர் அயோடைடு போன்ற உப்புக்களை விமானம் மூலமாக நீர் திவலைகளைக்கொண்ட மேகத்தின் மீது தூவுவார்கள். இந்த உப்பு நீர் திவலைகளை ஒன்றிணைத்து அவற்றின் எடையை அதிகரிக்கும். அதன்பின்னர் மழை பொழியத் துவங்கும். இதுவே மேக விதைப்பு அல்லது கிளவுட் சீடிங் எனப்படுகிறது.

ஆனால், இப்போது ஆய்வில் இருக்கும் திட்டத்தின்படி மழையைத் தரக்கூடிய மேகத்தினை கண்டறிந்த பின்னர் அவற்றில் மின்னூட்டத்தை செலுத்தி நீர் குமிழிகளை ஒன்றிணைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

SANAD அகாடமியில் ஆளில்லா விண்கலங்கள் மூலம் மேகங்களுக்குள் மின்னூட்டம் செலுத்தும் முறைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. காற்று தெளிவாக இருக்கும்போது மற்றும் பனிமூட்டம், தூசுக்கள் காற்றில் இருக்கும் நேரத்தில் இந்த ஆய்வுகள் நிகழ்த்தப்பட்டுவருகின்றன.

இதுகுறித்துப் பேசிய NCM ன் இயக்குனர் மற்றும் ஆசியாவின் ரீஜினல் அசோசியேஷன் II வின் ( Regional Association II ) தலைவரான டாக்டர் அப்துல்லா அல் மன்தோஸ்,” மழைப்பொழிவை அதிகரிக்கும் ஆய்வில் அமீரகத்தினை உலகத்திற்கு மையமாக்கும் பணிகளை NCM மேற்கொண்டுவருகிறது. இதன்மூலமாக உலகின் வறண்ட மற்றும் பகுதி வறண்ட பகுதிகளில் தண்ணீர்ப் பஞ்சம் வராமல் தடுக்க NCM முயற்சித்துவருகிறது” என்றார்.