UAE Tamil Web

11,000+ குழந்தைகளுக்கு தடுப்பூசி – அஜ்மான் சுகாதாரத்துறை அசத்தல்!

கொரோனா தொற்றை கட்டுக்குள் கொண்டு வரும் விதமாக தடுப்பூசி செலுத்தும் பணிகளில் அமீரக அரசு முனைப்பு காட்டி வருகிறது. இந்த நிலையில் கோடை விடுமுறைக்குப் பின்னர் பள்ளிகள் திறக்கப்பட உள்ள சூழலில் குழந்தைகளுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றன. இதற்காக சினோஃபார்ம் தடுப்பூசிக்கு அண்மையில் அமீரக அரசு அங்கீகாரம் வழங்கியது. இதன் நீட்சியாக அஜ்மானில் மட்டும் 10 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் 11,000 பேருக்கும் அதிகமாக சினோஃபார்ம் கொரோனா தடுப்பூசி முதல் தவணை செலுத்தப்பட்டுள்ளன. இதில் யாருக்கும் எந்தவித பக்கவிளைவுகளும் ஏற்படவில்லை. அஜ்மான் கிராண்ட் மாலில் நடைபெறும் குழந்தைகளுக்கான தடுப்பூசி முகாமில் கூட்டம் அலைமோதுகிறது. குழந்தைகளின் பெயரை எமிரேட்ஸ் ஐடி மூலம் பதிவு செய்து மிக எளிதாக தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட இருப்பதால் மாணவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

1 Share
Share via
Copy link