34.3 C
Dubai
July 14, 2020
UAE Tamil Web

அமீரகத்தில் அனைத்து வழிபாட்டுத் தலங்களையும் திறக்க அரசு அனுமதி – பிரார்த்தனையாளர்கள் பின்பற்றவேண்டிய விதிமுறைகள் என்ன?

mosque

அமீரகத்தில் கடந்த மார்ச் மாதத்தில் கொரோனாவின் தாக்கம் அதிகமாகிக்கொண்டே சென்ற காரணத்தினால் அனைத்து வழிபாட்டு தலங்களையும் தற்காலிகமாக மூடுமாறு அரசு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் அமீரக அரசின் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளால் அமீரகத்தில் கொரோனாவின் தாக்கமானது கட்டுக்குள் வந்திருக்கிறது. இதன்காரணமாக பல துறைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடைகளை தளர்த்திவருகிறது அரசு. இதன் ஒரு பகுதியாக ஜூலை 1 முதல் மீண்டும் கோவில்கள், தேவாலயங்கள் மற்றும் மசூதிகள் போன்ற வழிபாட்டுத் தலங்களையும் திறக்கலாம் என தேசிய அவசரநிலை, நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவித்திருக்கிறது.

வெளிப்புற சாலைகள், தொழில் நிறுவனப் பகுதிகள், தொழிலாளர்களின் குடியிருப்பு பகுதிகள், பொதுப் பூங்காக்கள் மற்றும் மால்கள் ஆகிய இடங்களுக்கு அருகில் இருக்கும் மசூதிகள் மறு அறிவிப்பு வரும்வரையில் திறக்கப்படாது என தேசிய அவசரநிலை, நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் டாக்டர். சைஃப் அல் தஹேரி (Dr Seif Al Dhaheri) அறிவித்திருக்கிறார்.

வழிபாட்டு தலத்திற்குள் 30 சதவிகித பிரார்த்தனையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் எனவும், வெள்ளிக்கிழமைகளில் மசூதிகளில் நடைபெறும் சிறப்பு தொழுகைக்கு மறு அறிவிப்பு வரும் வரையிலும் தடை விதிக்கப்படுவதாகவும் தஹேரி குறிப்பிட்டார்.

வழிபாட்டாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக, அமீரக சுகாதார அதிகாரிகளால் மசூதிகளில் உள்ள இமாம்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஏற்கனவே கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டுவிட்டதாக தஹேரி பத்திரிகையாளர் சந்திப்பின்போது தெரிவித்தார்.

சமூக மக்களின் பாதுகாப்பைக் கணக்கில்கொண்டு வயதானவர்கள், 12 வயதிற்கு உட்பட்டவர்கள், நெடுநாள் வியாதிகளால் பீடிக்கப்பட்டோர், கொரோனா நோயாளிகள் மற்றும் அவர்களுடன் நேரடி தொடர்பில் இருப்பவர்கள் மசூதிகளுக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தனது உரையின்போது தஹேரி குறிப்பிட்டார்.

மசூதிகளுக்கு வரும் பிரார்த்தனையாளர்கள் கவனத்திற்கு :

மசூதிகளுக்கு வர விரும்புவோர் Al Hosn அப்ளிகேஷனை தரவிறக்கிக்கொள்ள வேண்டும் – தஹேரி.

பிரார்த்தனையாளர்கள் முகக்கவச பயன்பாடு மற்றும் 3 மீட்டர் சமூக இடைவெளியைக் கடைபிடிக்கவேண்டும்.

வழிபாட்டாளர்கள் கைகுலுக்கிக்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது.

மசூதிகளில் தொழுகையாளர்கள் ஒன்றிணையத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், பிரார்த்தனைக்கு முன்னதான ஒழு செய்தலை (உடல் தூய்மைப்படுத்துதலை) மக்கள் தங்கள் வீடுகளிலேயே மேற்கொள்ளவேண்டும்.

தொழுகையாளர்கள் தங்களது தொழுகை விரிப்பை தங்களது வீடுகளில் இருந்து எடுத்துவருவதுடன், அதனை மசூதி வளாகங்களுக்குள் விட்டுச்செல்லக்கூடாது.

பிரார்த்தனையாளர்கள் மசூதிகளில் உள்ள குரானை பயன்படுத்தக்கூடாது. தொழுகைக்கு வருவோர் ஒவ்வொருவரும் தங்களுக்கான குரானை (அச்சுப்பிரதி அல்லது டிஜிட்டல் சாதனங்கள்) வீட்டிலிருந்து எடுத்துவர வேண்டும்.

எந்த மசூதியிலாவது புதிய கொரோனா நோயாளி இருப்பது தெரியவந்தால் உடனடியாக அந்த மசூதி மூடப்படும்.

இதையும் படிங்க.!