UAE Tamil Web

உலகின் மிக விலையுயர்ந்த பேரீச்சம்பழம் இதுதான்..! அடுத்தமுறை பேரீச்சம்பழம் வாங்கும்போது இதை கவனிக்கத் தவறாதீர்கள்..!

dates

அமீரகத்திலிருந்து நம்மாட்கள் சொந்த ஊருக்குச் செல்வதாக இருந்தால் வாங்கும் பொருட்களில் கோடாலி தைலத்திற்கு அடுத்தபடியாக இருப்பது பேரீச்சம்பழங்கள் தான். விதவிதமான நிறத்தில், வெவ்வேறு விலையில், வித்தியாசமான பெயர்களில் கிடைக்கும் பேரீச்சம்பழங்களை நீங்கள் பார்த்திருக்கலாம். இன்றல்ல மத்திய கிழக்கின் மிகப்பழமையான காலங்களிலேயே பேரீச்சம்பழங்கள் விளைந்ததற்கான சாட்சிகள் இருக்கின்றன.

ஸல் (நபி) அவர்களும் நோன்பு துறக்கும் வேளையில் பேரீச்சம்பழங்களையே உண்டதாக குரான் கூறுகிறது. இப்படி மத்திய கிழக்கின் மக்களோடும் அவர்களது வாழ்க்கையோடும் பிணைந்திருக்கும் இந்த பேரீச்சம்பழங்கள் நம் உடலுக்குத் தரும் நன்மைகள் ஏராளம்.

புரதம், இரும்புச்சத்து, வைட்டமிங்களில் A, B1, B2, B3, B5 மற்றும் C ஆகியவை இதில் இருக்கிறது. போலவே கால்சியம், சிங்க், சோடியம் மற்றும் மக்னீசியம் ஆகிய சத்துக்களும் இதில் உண்டு. இதெல்லாம் ஒருபக்கம் இருந்தாலும் பேரீச்சம்பழங்கள் தருகிற தித்திப்பும் அதன் சுவையும் எளிதில் நம்மை அடிமையாக்கிவிடும்.

இன்றும் மத்திய கிழக்கில் தங்களது வீடுகளுக்கு வருகிற விருந்தாளிகளுக்கு பேரீச்சம்பழங்களையே மக்கள் முதலில் கொடுக்கின்றனர். சொல்லப்போனால் இந்தப் பழம் இல்லாது பண்டிகைகளே இருக்காது. இப்படி செல்வாக்கு மிகுந்த பேரீச்சம்ழங்களில் சுமார் 200 வகைகள் இருக்கின்றன. ஆச்சர்யமாக இருக்கிறதா? ஆம். அமீரகம் மட்டுமல்லாது மத்திய கிழக்கின் பல நாடுகளிலும் பல்வேறு வகையான பேரீச்சம்பழங்கள் விளைகின்றன.

இங்குள்ள அதீத வெப்பம் பேரீச்ச மரங்களுக்கு உகந்தவை என்பதால் நல்ல விளைச்சலும் கிடைக்கிறது. இதன் காரணமாகவே கடலோரப் பகுதிகளில் விளையும் பேரீச்சம்பழங்களைக் காட்டிலும் உட்பகுதிகளிலும் பாலைவனத்திலும் விளையும் பழங்கள் அதிக ருசி கொண்டவையாக இருக்கின்றன.

இதில் கவனிக்கவேண்டிய மிகமுக்கிய விஷயம் என்னவென்றால் எல்லா பேரீச்சம்பழ மரங்களும் ஒரே மாதிரியான சூழலில் தாக்குப்பிடிப்பதில்லை. ஒவ்வொரு வகையான பழத்திற்கும் அதற்கான பராமரிப்பு தேவைப்படுகிறது. இதுவே அதன் ருசியை தீர்மானிக்கிறது. இதன் காரணமாகவே பேரீச்சம்பழங்களில் ஒருவகை மிக விலை உயர்ந்ததாகவும் சில விலை குறைந்ததாகவும் இருக்கிறது.

உதாரணமாக மஜ்தூள் வகை பேரீச்சம்பழங்கள் வளர மிக வறண்ட இடம் தேவை. ஆனால் குறிப்பிட்ட நேரத்தில் நீரும் கிடைக்கவேண்டும். இதன்காரணமாக குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே இவை பயிர் செய்யப்படுகின்றன. இதன் விலையேற்றத்திற்கு இதுவும் ஒரு காரணம்.

சொல்லப்போனால் பழத்தின் அளவு, நிறம், எடை, சுவை ஆகியவை அவை எங்கு வளர்கின்றன என்பதைப் பொறுத்தே அமைகின்றன. ஒரே வகையான பழம் ஓரிடத்தில் ஒரு ருசியாகவும், மற்றொரு இடத்தில் வேறு மாதிரியும் இருப்பதற்கு காரணம் இதுவே.

பழங்களை பறித்து உலர வைத்தல், பேக் செய்வதிலும் அதன் தன்மையில் மாறுபாடு ஏற்படலாம் என்கிறார்கள் நிபுணர்கள்.

உலகின் மிக விலையுயர்ந்த பேரீச்சம்பழ வகைகள்

 • அஜ்வா (Ajwa)
 • மஜ்தூள் (Madjool)
 • தேக்லட் நூர் (Deglet Noor)
 • சுக்காரி (Sukkari)
 • கலாஸ் (Khalas)

அமீரகத்தில் விளையும் மிக விலையுயர்ந்த பேரீச்சம்பழ வகைகள்

 • கலாஸ் (Khalas)
 • பார்ஹி (Barhi)
 • தப்பாஸ் (Dabbas)
 • லூலூ (Lulu)
 • ஃபார்த் (Fard)
 • கெனைஸி (Khenaizi)
 • ஷீஷ் (Sheesh)

(அமீரக காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழலுக்கான அமைச்சகம் மேற்கண்ட பட்டியலை வெளியிட்டுள்ளது)

பழங்களின் வகைகளைப்போலவே சிலவற்றை உண்ணும் விதத்திலும் மாறுபாடு இருக்கிறது. எடுத்துக்காட்டாக கலாஸ் பேரீச்சம்பழத்தை பாதி கனிந்த நிலையில் சாப்பிடுவது பலரின் வழக்கமாக இருக்கிறது. அபுதாபியில் உள்ள விவசாயிகள் சேவை மையத்தின் தலைவரான மன்சூர் அல் மன்சூரி அமீரகத்தின் மிகவும் விலையுயர்ந்த பேரீச்சம்பழம் மஜ்தூள் தான் என்கிறார்.

பேரீச்சம்பழ வகைகளின் சில சுவாரஸ்யத் தகவல்கள்

அமீரகத்தில் விளையும் மஜ்தூள் பெரும்பாலும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது. உள்ளூர் சந்தையில் இது கிலோ 100 திர்ஹம்ஸ் வரையில் விற்பனை செய்யப்படுகிறது.

கலாஸ் வகை அல் அய்ன் மற்றும் மேற்குப் பகுதியில் (அல் தஃப்ரா) அதிகம் விளைவிக்கப்படுகிறது. உள்ளூரில் இது மிகவும் பிரபலமாகும். இது கிலோ 40 திர்ஹம்ஸ் வரையில் விற்பனை செய்யப்படுகிறது.

ஃபார்த் வகையுடன் முந்திரி, பாதாம், பிஸ்தா ஆகியவை கலந்து விற்பனை செய்யப்படுவது வழக்கம். இந்தக் கலவையின் விலை கிலோ 50 திர்ஹம்ஸ் ஆகும். தனியாக பேரீச்சம்பழம் மட்டும் வாங்கினால் 20 திர்ஹம்ஸ் ஆகும். சுற்றுலா வாசிகளிடையே இது மிகப் பிரசித்தி பெற்றது.

போ மான் (Bou Maan) வகை பழத்தையும் பாதி கனிந்த நிலையிலேயே சாப்பிடலாம். அளவில் பெரியதாக இருக்கும் இது லிவா மற்றும் அல் அய்னில் விளைவிக்கப்படுகிறது. கிலோ 20 திர்ஹம்ஸ் வரையில் விற்கப்படுகிறது.

தப்பாஸ் வகையைப் பற்றிச் சொல்லவேண்டுமென்றால் தப்பாஸ் என்றால் அரபி மொழியில் “தேன் பேரிச்சை” எனப் பொருள்படும். கடந்த 300 வருடங்களாக லிவாவில் இது விளைவிக்கப்படுகிறது. அமீரகத்தின் பிற பகுதிகளில் விளைந்தாலும் சரியான சாகுபடி, எடை, அளவை அவை கொடுப்பதில்லை.

பார்ஹி வகை பழத்தை காயாக இருக்கும்போதே சாப்பிடலாம். அதற்கு அதிக ருசி இருக்கிறதாம். இது அமெரிக்காவில் பெரும்பான்மையாக விளைகிறது.

தேக்லட் நூர், பேரீச்சம்பழங்களின் ராணி என்றழைக்கப்படுகிறது. வரலாற்றில் முதன்முறையாக அல்ஜீரியா மற்றும் துனிசியாவில் இது விளைவிக்கப்பட்டது.

ஸல் (நபி) அவர்களால் விளைவிக்கப்பட்ட அஜ்வா வகை பழங்களுக்கு இன்றளவும் சந்தையில் நல்ல மதிப்பு இருக்கிறது. பெரும்பாலும் சவூதியில் விளைகிறது.

உலகளவில் பேரீச்சம்பழங்களை அதிகளவில் உற்பத்திசெய்யும் நாடுகளின் பட்டியலில் அமீரகம் 4 வது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் இருப்பது எகிப்து.

டாப் 10 பேரீச்சம்பழ உற்பத்தி நாடுகளும் அவற்றின்அளவும் 

(1000 மெட்ரிக் டன்கள்)

 1. எகிப்து – 1,373.57
 2. சவுதி அரேபியா – 1,122.82
 3. ஈரான் – 1,016.61
 4. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் –  900.00
 5. அல்ஜீரியா  – 690.00
 6. ஈராக் – 619.18
 7. பாகிஸ்தான் – 557.28
 8. ஓமான் – 268.01
 9. துனிசியா – 180.00
 10. லிபியா – 165.95

அபுதாபி மினா சையத் மார்கெட்டில் உள்ள பழ விற்பனை அங்காடியில் விற்பனையாகும் பேரீச்சம்பழங்களின் விலைப்பட்டியல்

மஜ்தூள் VVIP –  120 திர்ஹம்ஸ்
ஆம்பர் – 120 திர்ஹம்ஸ்
அஜ்வா – 120 திர்ஹம்ஸ்
சகஜ் VVIP – 80 திர்ஹம்ஸ்
மப்ரூம் VVIP – 70 திர்ஹம்ஸ்
குதாரி – 60 திர்ஹம்ஸ்
சுஹைனி – 35 திர்ஹம்ஸ்
ஷிஷி – 30 திர்ஹம்ஸ்
கனீசி –  25 திர்ஹம்ஸ்
தப்பாஸ் – 15 திர்ஹம்ஸ்
லூலூ – 15 திர்ஹம்ஸ்

(மேற்கண்ட அனைத்தும் 1 கிலோவிற்கான விலைகளாகும்)

dates
15 Shares
Share via
Copy link