ஷார்ஜாவை பூர்வீகமாகக் கொண்ட பெண் ஒருவருக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளன. கணவருடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக விவகாரத்து பெற்றதாக கூறப்படுகிறது. குழந்தைகளும் தந்தையுடன் சென்றதால் இந்த பெண் மட்டும் தனியாக வாழ்ந்து வந்துள்ளார். கணவர் பணி நிமித்தமாக வெவேறு இடங்களுக்கு மாறியதால் குழந்தைகளின் நிலை குறித்து தாயாருக்கு தெரியவில்லை.
இந்த நிலையில் 11 ஆண்டுகளுக்குப் பிறகு தாயை காண ஆசைப்பட்ட குழந்தைகள் எப்படி கண்டுபிடிப்பது என யோசித்துள்ளனர். பின்னர் ஷார்ஜா சமூக நலத்துறையின் காணாமல் போனவர்களை மீட்கும் சேவை எண்ணான 800700ஐ தொடர்பு கொண்டு தங்கள் நிலையை எடுத்துரைத்துள்ளனர். இதனை கேட்டு மனம் இறங்கி வந்த ஷார்ஜா சமூக நலத்துறை அதிகாரிகள் நீண்ட நாள் தேடுதல் வேட்டைக்குப் பின்னர் குழந்தைகளின் தாயாரை கண்டுபிடித்தனர்.
இதையடுத்து குழந்தைகள் மற்றும் தாயாருக்கு ஷார்ஜா சமூக நலத்துறை அழைப்பு கொடுக்க குழந்தைகளை கண்டதும் கண்ணீர் மல்க ஆரத் தழுவி அந்த பெண் அன்பு பாராட்டினார். 11 ஆண்டுகளுக்குப் பிறகு குழந்தைகளை தாயாருடன் சேர்த்து வைத்த ஷார்ஜா சமூக நலத்துறைக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன
