37.4 C
Dubai
August 10, 2020
UAE Tamil Web

துபாய் : களவுபோன காரை 25 நிமிடத்தில் கண்டுபிடித்த காவல்துறையினர்..!

Dubai-Mounted-Police-_

துபாயில் உள்ள நயிஃப் பகுதியில் கார் திருடப்பட்டதாக புகார் தெரிவிக்கப்பட்ட 25 வது நிமிடத்தில் குற்றவாளியை மடக்கிப் பிடித்திருக்கிறார்கள் துபாய் காவல்துறையின் மவுண்டட் காவல் பிரிவைச் சேர்ந்த 2 காவலர்கள்.

மவுண்டட் காவல் பிரிவு எனப்படும் குதிரை மீதேறி ரோந்து பணிகளில் ஈடுபட மிகுந்த தேர்ச்சி பெற்ற காவல் துறையினரால் இந்த கார் திருடன் கைது செய்யப்பட்டிருக்கிறான்.

துபாய் காவல் துறையின் மவுண்டட் பிரிவைச் சேர்ந்த நவாஃப் கால்ஃபான் (Nawaf Khalfan) மற்றும் முகமது ஷேக் அப்துல்லா (Mohammad Shaik Abdullah) ஆகிய இருவர் தான் இந்த அசத்தலான காரியத்தைச் செய்திருக்கிறார்கள்.

வழக்கம்போல் தங்களது குதிரைகளில் ரோந்து பணிகளை மேற்கொண்டிருந்த இவர்களிடம் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ஒருவர் கார் திருடியதைப் பற்றிய தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

துபாய் மவுண்டட் காவல் பிரிவின் இயக்குனரான பிரிகேடியர் முகமது அல் அத்ப் (Mohammad Al Adhb), ” இரண்டு காவலர்களும் அந்த பகுதியை கண்காணித்திருக்கிறார்கள். சந்தேகிக்கும் படி இருந்த நபரை கவனித்திருக்கிறார்கள். காரின் நம்பர் பிளேட்டை வைத்து அது திருடப்பட்ட கார் என்பதனை உறுதிசெய்த பின்னர் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த அந்த சந்தேகத்திற்குரிய நபரை கைது செய்திருக்கிறார்கள். காவலர்கள் துரிதமாக செயல்பட்டு 25 நிமிடத்திற்குள் சந்தேகத்திற்குரியவரை கைது செய்திருக்கிறார்கள்” என்றார்.

குற்றவியல் விசாரணைப் பிரிவின் துணைத் தளபதியான மேஜர் ஜெனரல் கலீல் இப்ராஹீம் அல் மன்சூரி (Khalil Ebrahim Al Mansouri) துரிதகதியில் செயல்பட்டு சந்தேகத்திற்குரியவரை கைது செய்த இரு காவலர்களையும் பாராட்டினார்.

“குற்றவியல் வழக்கில் துபாய் காவல்துறை வேகமாக செயல்படும். சம்பவம் நிகழ்ந்த பகுதியை கண்காணித்து, சந்தேகத்திற்குரியவரை கையும் களவுமாக பிடித்ததில் இந்த இரண்டு காவலர்களின் பங்கு மகத்தானது” என மன்சூரி தெரிவித்தார்.

விசாரணையை முடிக்கும் விதமாக சந்தேகிக்கும் நபரை, பொது வழக்குத் துறையிடம் ஒப்படைத்தது காவல்துறை.

துபாயில் தேசிய சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்ற நேரத்தில் 571 ரோந்து பணிகளை தங்களது காவல்துறை மேற்கொண்டதாக பிரிகேடியர் அல் அத்ப் தெரிவித்தார்.

“நாளொன்றுக்கு நகரத்தின் வெவ்வேறு பகுதிகளில் 15 ரோந்து பணிகளை மேற்கொள்கிறோம். குறுகலான இடங்களுக்கும் சென்று குற்றத்தை எதிர்க்கும் வல்லமை மவுண்டட் பிரிவு காவல்துறைக்கு உண்டு” என அல் அத்ப் குறிப்பிட்டார்.

இதையும் படிங்க.!