UAE Tamil Web

அமீரகத்தின் புதிய ஜனாதிபதி.. பொறுப்புகளை ஏற்றுக்கொண்டார் முகமது பின் சயீத் – மனதார வாழ்த்திய பிரதமர் ஷேக் முகமது

ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும், பிரதமரும், துபாய் ஆட்சியாளருமான மதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம், நமது ஐக்கிய அரபு அமீரகம் தற்போது தனது வரலாற்றில் ஒரு புதிய தலைவரின் கீழ் ஒரு புதிய கட்டத்தை நோக்கி நகரவிருக்கிறது என்பதை உறுதிப்படுத்தினார்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட அபுதாபியின் ஆட்சியாளரான மதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானை வாழ்த்திய ஷேக் முகமது பின் ரஷீத், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மக்கள் தங்கள் விசுவாசத்தையும் முழு ஆதரவையும் அவருக்கு அளித்து ஒரு புதிய வரலாற்று பயணத்தை மேற்கொள்ளவேண்டும் என்றார்.

இது குறித்து மதிப்பிற்குரிய ஷேக் முகமது தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள கடிதத்தில், ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான், மறைந்த ஷேக் சயீத் பின் சுல்தானின் நிழல் போல திறன்பட செயலாற்றுவார் என்று கூறினார்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபராக நேற்று அவர் பதவியேற்றது, நாட்டிற்கான ஒரு புதிய வரலாற்று சகாப்தத்தை பிரதிபலிக்கிறது. ஐக்கிய அரபு எமிரேட்ஸின் உலகளாவிய இறையாண்மை, பெருமை மற்றும் வளர்ச்சியை நோக்கி ஒரு சிறந்த பயணத்தை எதிர்பார்க்கிறோம் என்றும் ஷேக் முகமது பின் ரஷீத் கூறினார்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் மக்கள் மதிப்பிற்குரிய முகமது பின் சயீத் அல் நஹ்யானை அவரது தாராள மனப்பான்மை, இரக்கம் மற்றும் மென்மை ஆகியவற்றிற்காக அதிக அளவில் நேசிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் நோயுற்றவர்களைக் கவனித்துக்கொள்வதையும், அவர்களின் துன்பத்தைப் போக்குவதையும், குழந்தைகளுக்கு ஆதரவளிப்பதையும், தியாகிகளின் குடும்பங்களுக்கு ஆறுதல் அளிப்பதையும், அவர்களின் தலைமுறையினரின் எதிர்காலத்திற்காகச் சிந்தித்துத் திட்டமிடுவதையும் மக்கள் பேரன்போடு வரவேற்பார்கள் என்பதில் ஐயமில்லை என்றே கூறலாம்.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap