உலகின் மிக அழகான கட்டிடங்களில் ஒணன்றான துபாயின் “மியூசியம் ஆஃப் தி ஃப்யூச்சர்” அருங்காட்சியகம் நேற்று 22.2.2022 திறக்கப்பட்டது.
அமீரகத்தின் துணை பிரதமரும், துபாய் ஆட்சியாளர் ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம், துபாயின் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷித் அல் மக்தூம் மற்றும் ஷேக் மக்தூம் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் ஆகியோர் இந்த மியூசியம் ஆஃப் தி ஃப்யூச்சர் அருங்காட்சியகத்தை பிரம்மாண்ட முறையில் லைட்ஷோ உடன் திறந்து வைத்தனர்.
இந்த அருங்காட்சியகமானது, 77 மீட்டர் உயரமும் 30,000 சதுர மீட்டர் பரப்பளவில் தூண்கள் இன்றி நீள்வட்ட வடிவில் ஏழு மாடியுடன் வடிவமைத்து கட்டப்பட்டுள்ளது.
துபாயின் முக்கிய சாலையான ஷேக் ஜைத் சாலையில் மியூசியம் ஆஃப் தி ஃப்யூச்சர் அருங்காட்சியகம் ஒரு முக்கிய சின்னமாக அமைந்துடுள்ளது.
துபாயின் அசாத்தியமான கட்டிடக்கலை முயற்சிகளுக்கு மைல்கல்லாக இந்த அருங்காட்சியகம் உள்ளது.
துபாயின் மியூசியம் ஆஃப் தி ஃப்யூச்சர் அருங்காட்சியகத்திற்கு செல்லும் பார்வையாளர்கள் 2071 ஆம் ஆண்டில் பல்வேறு துறைகளில் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை ஆராயலாம் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் இந்த அருங்காட்சியகம், மக்களை தங்கள் சொந்த எதிர்காலத்தை உருவாக்குவதில் ஊக்குவிக்கும். செயல்திறன் கொண்ட முறையில் மனித எதிர்காலத்தை வடிவமைக்கும் தொழில் நுட்பங்களும் அதன் திறன்களை ஆராய்ந்து அனுபவிக்க மக்களுக்கு இது வழிவகுக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தூண்கள் இன்றி நீள்வட்ட வடிவைக் கொண்ட இந்த மியூசியம், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களுக்கான சோதனைக் களமாகவும், உலகின் முன்னணி விஞ்ஞானிகள், சிந்தனையாளர்கள், கண்டுபிடிப்பாளர்கள் ஒன்றிணைந்து தங்களின் படைப்புகளை உருவாக்குவதற்கான தளமாகவும் செயல்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
துபாயின் ‘மியூசியம் ஆஃப் தி ஃப்யூச்சர்’அருங்காட்சியகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.motf.ae-ல் டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ளலாம். பார்வையாளர்கள் 23-02-2022 இன்று முதல் அனைத்து நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை காணலாம்.
