UAE Tamil Web

10 ஆண்டுகளாக மக்கள் நுழையவே பயப்படும் “33 ஆம் நம்பர் பில்டிங்” – துபாயில் மறைக்கப்படும் மர்ம கட்டிடம்..!

haunted-house-2

பேய்கள் பற்றிய அமானுஷ்ய கதைகளைப் படிப்பது/கேட்பது நம்மில் பலருக்கும் பிடித்த விஷயம் தான் என்றாலும் அதை அப்படியே நம்புவதற்கு நமது மூளை பல சமயங்களில் இடங்கொடுக்காது. அதற்கு இரண்டு காரணங்களைச் சொல்லலாம். முதலாவது அதில் நேரடித் தன்மை இல்லாதது. பேய், ஆவி குறித்த சம்பவங்களைச் சொல்பவர்கள் தான் அவற்றைப் பார்த்ததாக சொல்லமாட்டார். தனக்குத் தெரிந்தவர், உறவினர், நண்பர், எப்போதோ இறந்துபோன தாத்தா, பாட்டி வாழ்வில் நடந்ததாக நம்மிடம் சொல்வார்.

எங்க அப்பா ஒரு தடவை.. என ஆரம்பித்தால் நாமும் லயித்துப் போய் கேட்கத் துவங்கிவிடுவோம். பேய் என்றால் மூளைக்குள் ஏற்படும் குறுகுறுப்பு செய்யும் வேலை. இரண்டாவதாக நவீன தொழில்நுட்ப காலம் நமக்கு அளித்திருக்கும் விஞ்ஞான அறிவு இதுபோன்ற கதைகளில் உள்ள சாகசங்களை மட்டும் எடுத்துக்கொண்டு மற்றவற்றை ஒதுக்கித்தள்ளிவிடும்.

ஆனால் அறிவியலால் விடையளிக்க முடியாத, பௌதிக விதிகளுக்குக் கட்டுப்படாத, சமன்பாடுகளின் எல்லைகளுக்குள் சிக்காத சமாச்சாரங்கள் இந்த உலகில் ஏராளம் உண்டு. அப்படியானவற்றுள் ஒன்றுதான் துபாயில் உள்ள 33 ஆம் நம்பர் பில்டிங்.

நவீனத்தின் உச்சம் தொட்ட துபாயில் இப்படியும் ஒரு இடமா? என உங்களுக்குக்குள் கேள்வி எழுவது புரிகிறது. ஆனால் மேரிஃபே அப்படி நினைக்கவில்லை. இந்த கட்டிடத்தின் மர்மத்தை வெளியே சொன்ன அல்லது இதற்கு பிள்ளையார்சுழி போட்ட முதல்பெண் அவர்தான்.

2011 ஆம் ஆண்டுவாக்கில் துபாயில் மெக்டொனால்டு உணவு வழங்கும் நிறுவனத்தில் பணிபுரிபவர்களுக்கு தங்குமிடம் தேவைப்பட்டது. அப்போதுதான் அல்கூஸ் பகுதியில் உள்ள அல் கைல் கேட்-டில் இருக்கும் இந்த 33 ஆம் எண் கொண்ட பில்டிங்கை வாடகைக்கு எடுத்திருக்கிறது நிறுவனம். அப்போதுதான் சிக்கல் ஆரம்பித்தது.

ghost house
Image Credit: Gulf News

பணியாளர்களுக்காக மொத்த கட்டிடமும் ஒப்படைக்கப்பட்டது. கட்டிடத்தின் அனைத்து வாசல்களையும் அவர்கள் மட்டுமே பயன்படுத்திவந்தனர். அங்கே தங்கியிருந்த பணியாளர்களில் ஒருவர் தான் மேரிஃபே. முதன்முதலில் அறைகளுக்கு குடியேறியதும் வழக்கம்போல உற்சாகமாகத்தான் உணர்ந்திருக்கிறார்கள் பணியாளர்கள். ஆனால் நாட்கள் செல்லச் செல்ல விபரீதங்கள் முளைவிடத் துவங்கியதாக மேரிஃபே குறிப்பிடுகிறார்.

“டூத் பிரஷ், செல்போன் உட்பட பல பொருட்கள் திடீரென்று காணாமல்போய்விடும் எனவும் பின்னர் சில நாட்கள் கழித்து சம்பந்தமே இல்லாத இடத்தில் அவை கிடக்கும்” என்கிறார் மேரிஃபே. துவக்கத்தில் நண்பர்கள் விளையாடுகிறார்கள் என நினைத்திருக்கிறார். ஆனால் இந்த சம்பவங்கள் வாடிக்கையாகிப் போனதற்குப் பின்னர் தான் அவருக்குள் கிலி ஏற்பட்டிருக்கிறது.

“கட்டிடத்திற்குள் எங்கு சென்றாலும் நம்முடன் யாரோ இருப்பதுபோலவே தோன்றும்” எனச் சொல்லும் அவர் சில நாட்களிலேயே அங்கிருந்து வெளியேறுவதாக தெரிவிக்க, மொத்த பணியாளர்களுமே வேறு கட்டிடத்திற்கு மாற்றப்பட்டனர்.

புதுப்பிக்கப்படாத கட்டிடம்

இந்தக் கட்டிடத்தினை நிர்வகிக்கும் சல்வான் நிறுவனம் இதனை மறுத்துள்ளது. இந்த நிறுவனத்தின் சூப்பர்வைசர் அஷ்ரப் இதுகுறித்துப் பேசுகையில்,” இந்தக் கட்டிடத்தில் அமானுஷ்யம் என்று ஏதுமில்லை. அங்கே பராமரிப்புப் பணிகள் வெகுநாட்களாக நடைபெறவில்லை. அதற்குப் பக்கத்தில் உள்ள மற்றொரு கட்டிடமும் இதே நிலையில் தான் இருக்கிறது. ஒரே காண்ட்ராக்டர் தான் இந்த இரண்டு கட்டிடங்களையும் கட்டினார். பராமரிப்பு வேலைகள் தான் செய்யப்படவேண்டுமே தவிர சிலர் கூறுவதுபோல அமானுஷ்யங்கள் என ஏதுமில்லை” என்றார்.

33 no building
Image Credit: emirates247

இந்தக் கட்டிடத்திற்கு சற்று தொலைவில் உள்ள மற்றொரு கட்டிடத்தில் வாட்ச்மேனாக இருக்கும் அப்துல் சலாம் இதுபற்றிப் பேசுகையில்,” அந்தக் கட்டிடத்தின் பல யூனிட்களில் நீர் கசிவு இருக்கிறது” என்றார்.

இந்த மர்ம கட்டிடத்தின் பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டுவரும் இடாமா நிறுவனத்தின் பணியாளர் ராபினும் இதை ஒப்புக்கொள்கிறார்.

வதந்தி மட்டுமே

இந்தக் கட்டிடத்தின் அருகாமையில் வசிக்கும் சிலரிடம் இதுகுறித்துக் கேட்டபோது இது வதந்தியாகத்தான் இருக்கவேண்டும் என்பதே பலரின் கருத்தாக இருக்கிறது. இந்தியாவைச் சேர்ந்த ஜெயிஸ் ஜான் கடந்த 6 ஆண்டுகளாக அமீரகத்தில் பணிபுரிந்துவருகிறார். இந்தக் கட்டிடத்தின் அருகாமையில் தான் ஜெயிஸ் வசித்துவருகிறார். இதுகுறித்து அவர் பேசுகையில்,”ஆரம்பத்தில் இந்த மர்ம கட்டிடம் குறித்த பல்வேறு தகவல்கள் என்னை அச்சுறுத்தியது. என்னுடைய பொருட்கள் காணாமல்போவது போலத் தோன்றியது. ஆனால் அது என் பயத்தால் அப்படித் தோன்றுகிறது என சீக்கிரத்தில் புரிந்துகொண்டேன்” என்கிறார்.

மர்ம கட்டிடத்தில் சட்ட விரோத செயல்களில் சிலர் ஈடுபட்டுவருவதாகவும் அதனால் கட்டிடத்தை திறக்க அதிகாரிகள் தடை விதித்துள்ளதாகவும் அப்பகுதியில் வசிப்பவர்கள் சிலர் தெரிவித்தனர்.

ஆனால், மேரிஃபே கூறுவது ஒன்றைத்தான்.” அவர்களுக்கு அந்த பயங்கரமான அனுபவம் ஏற்படாதவரையில் அது பராமரிப்பு கோளாறாகவோ நீர்க்கசிவு பிரச்சினையாகவோ இருக்கலாம். ஆனால் எனக்கு அப்படியில்லை” என அவர் தீர்க்கமாக கூறுகிறார்.

al khail gate
Image Credit: emirates247

இதனடிப்படையில் பார்க்கும்போது சில கேள்விகள் தாமாக எழுகின்றன. மேரிஃபே உள்ளிட்ட பணியாளர்கள் அந்த கட்டிடத்திலிருந்து வெளியேறியது 2011 ஆம் ஆண்டில். அதன்பின்னர் இந்த 10 ஆண்டுகளில் யாருமே அந்த கட்டிடத்திற்கு குடியேறவில்லை. அனைத்து கதவுகளும் இந்நேரம் வரையிலும் பூட்டப்பட்டுக்கிடக்கின்றன. ஏன் இத்துணை பொருட்செலவில் ஒரு கட்டிடத்தைக் கட்டி, 10 ஆண்டுகளாக வெறுமனே வைத்திருக்கிறது சல்வான் நிறுவனம்? பராமரிப்புப் பணிகள் தான் சிக்கல் எனில் விரைந்துமுடிக்க நிறுவனம் சுணக்கம் காட்டுவது ஏன்? இப்படி கேள்விகள் கேள்விகளாகவே எஞ்சுகிறது.

இதற்கு தர்க்கப் பூர்வமாக பதில்கள் இருப்பினும் மக்கள் இன்றும் இந்த இந்த 33 ஆம் நம்பர் கட்டிடத்தைப் பற்றி குறையாத ஆர்வத்துடன் பேசி/எழுதி வருகிறார்கள். அதற்கும் கூட அந்த குறுகுறுப்புத்தான் காரணமாக இருக்கக்கூடும்.

haunted-house-2
232 Shares
Share via
Copy link