இந்திய பிரதமர் மோடி அமீரகம் வருகை ; அமீரகத்தின் மிக உயரிய விருதை பெறுகிறார்!

இந்திய பிரதமர் மோடிக்கு அமீரகத்தின் மிகவும் உயரிய விருதான ‘ஆர்டர் ஆஃப் சயாத் விருது கடந்த ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்டது.

அமீரக நிறுவன தந்தையான ஷேக் சயாத் பின் சுல்தான் அல் நஹ்யானின் பெயரில் வழங்கப்படும் இந்த விருது அவரது நூற்றாண்டு பிறந்த தினத்தையொட்டி மோடிக்கு வழங்கப்பட உள்ளதாக, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி கடந்த 2015-ம் ஆண்டு அமீரகம் சென்று இருநாட்டு உறவுகளை பலப்படுத்துவது குறித்து அந்த நாட்டு தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது நாம் அறிந்த தகவல் தான்.

அதனை தொடர்ந்து, அமீரக பட்டத்து இளவரசர் கடந்த 2016-ம் ஆண்டில் ஒருமுறையும், 2017-ம் ஆண்டு குடியரசு தினவிழாவுக்கு சிறப்பு விருந்தினராகவும் இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டார். இதனால் இருநாடுகளுக்கு இடையே உறவு மேலும் பலப்பட்டு வந்தது.

இந்த ஒற்றுமை உறவு பாலத்துக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் செயல்பட்டு வருவதற்காக பிரதமர் மோடிக்கு இந்த விருது வழங்கப்பட உள்ளது.

இந்த நிலையில் பிரதமர் மோடி அரசு முறை பயணமாக வருகிற ஆக.23ம் தேதி அமீரகம் செல்கிறார். 24ம் தேதி தேதி வரை அங்கு தங்கியிருக்கும் மோடி, பட்டத்து இளவரசர் ஷேக் முகமது பின் சயாத் அல் நஹ்யானுடன் சர்வதேச விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

பிரதமர் மோடியின் இந்த பயணத்தின் போது அவருக்கு ‘ஆர்டர் ஆப் சயாத்’ விருது வழங்கப்படுகிறது. இதற்காக அவர் ஏற்கனவே அமீரக தலைவர்களுக்கு நன்றி தெரிவித்து இருந்தார்.

Loading...